திரையரங்கில் விஜய் கட்அவுட்டிற்குச் சேவலைப் பலியிட்ட ரசிகரின் செயல்: “இதெல்லாம் என்ன மனநிலை?” என பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் கடும் கண்டனம்!

சென்னை: திருச்சியில் ‘ஜனநாயகன்’ திரைப்பட வெளியீட்டின் போது, நடிகர் விஜய்யின் கட்அவுட் முன்பாகச் சேவலை அறுத்து ரத்தகாவு கொடுத்த ரசிகரின் அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய மனிதநேயமற்ற மற்றும் மூடநம்பிக்கை சார்ந்த செயலுக்குப் பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

திருச்சியில், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் நடிப்பில் புதிதாக வெளியாகியிருக்கும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைக் காண்பதற்காக வந்த ரசிகர் ஒருவர், திரையரங்கின் வெளியே வைக்கப்பட்டிருந்த நடிகரின் பிரம்மாண்ட கட்அவுட் முன்பாகச் சேவலை அறுத்தெடுத்து, அதன் குருதி பேனரில் தெறிக்கும்படி பலியிட்ட காணொளி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்தச் சம்பவம் காண்போருக்குக் கடும் அதிர்ச்சியையும், அருவருப்பையும் அளிக்கிறது.

தவெக அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்தே மாநிலத்தில் நடைபெற்று வரும் பல்வேறு விரும்பத்தகாத சம்பவங்களைப் பார்க்கும்போது, இதுபோன்ற பொறுப்பற்ற செய்கைகளில் ஈடுபடுபவர்கள் எல்லாம் உண்மையாகவே சமூக அறிவோ, மன முதிர்ச்சியோ பெற்றவர்கள்தானா என்ற நியாயமான சந்தேகம் பொதுமக்களுக்கு எழுகிறது.

தமிழ்நாட்டில் சினிமா நடிகர்களின் திரைப்பட வெளியீட்டின் போது அவர்களின் கட்அவுட்டுகளுக்குப் பால் அபிஷேகம் செய்வதும், மதுபானங்களை ஊற்றி அபிஷேகம் செய்வதும் போன்ற வீண் ஆடம்பரச் செயல்கள் காலங்காலமாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆனால், நேற்று கொண்டாட்டம் என்ற பெயரில் அதன் உச்சக்கட்டமாக ஒரு உயிரினத்தைக் கொடூரமாக அறுத்து, குருதி தெறிக்கப் பலியிடும் அவலம் நடந்துள்ளது. இது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத, கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டிய செயலாகும்.

ரசிகர்கள் தங்களின் அபிமான நட்சத்திரங்களின் திரைப்படங்களை அல்லது அவர்களின் சாதனைகளைக் கொண்டாட விரும்பினால், சமூகத்திற்குப் பயனளிக்கும் வகையில் மரக்கன்றுகளை நட்டு வைப்பது, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது, அன்னதானம் அளிப்பது என எத்தனையோ நன்நெறி வழிகள் உள்ளன. ஆனால், அவற்றைையெல்லாம் விட்டுவிட்டு, தமிழ்நாட்டின் ஆன்மீகக் கலாச்சாரத்தில் இறைவனுக்கு உகந்ததாகக் கருதப்படும் சில நம்பிக்கைகளையும் சடங்குகளையும், சாதாரணச் சினிமா நடிகர்களின் கட்அவுட்டுகளுக்கு முன் திணிப்பது மிகவும் தவறான முன்னுதாரணமாகும். இதனைப் பார்த்து நாளடைவில் மற்றவர்களும்கூட பின்பற்றத் தொடங்கிவிடும் அபாயம் உள்ளது.

இவர்களைப் போன்ற தீவிர ரசிகர்கள் ‘சினிமா என்பது வேறு, நிஜ வாழ்க்கை என்பது வேறு’ என்ற எளிய உண்மையை எப்போதுதான் உணரப் போகிறார்களோ தெரியவில்லை. இனிவரும் காலங்களில் திரையரங்க வளாகங்களிலோ அல்லது பொது இடங்களிலோ இதுபோன்ற அருவருக்கத்தக்க, வன்முறை சார்ந்த செயல்களை அனுமதிக்காத வண்ணம், காவல்துறையும் மாநில அரசும் தகுந்த சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும், திரைத்துறையைச் சேர்ந்தவர்களும், சம்பந்தப்பட்ட நடிகர்களும் தங்களின் ரசிகர்களுக்கு நல்வழி காட்டி, இதுபோன்ற செயல்களைக் பகிரங்கமாகக் கண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு வானதி சீனிவாசன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.