தூத்துக்குடியில் விசாரணைக் கைதி காவல்துறையினரால் படுகொலை: தவெக அரசைக் கடுமையாகச் சாடி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை!

சென்னை: தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் அருணாச்சலம் என்ற விசாரணைக் கைதி காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டதாக எழுந்துள்ள புகார் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்த மரணத்தை உடனடியாகக் கொலை வழக்காகப் பதிவு செய்து, தொடர்புடைய காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

தூத்துக்குடி தென்பாகத்தில் அருணாச்சலம் எனும் சிறைவாசி காவல்துறையினரால் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது. அவர் இறப்பதற்கு முன்பாக, தான் காவல்துறையினரால் எவ்வாறெல்லாம் தாக்கப்பட்டேன் என்பது குறித்துப் பேசிய மரண வாக்குமூலக் காணொளி நெஞ்சைப் பதைபதைக்கச் செய்கிறது.

ஏற்கனவே சிறைக்குள் சபரிவர்மன் எனும் சிறைவாசி அடித்துக் கொல்லப்பட்ட ரணத்தின் சுவடு மக்கள் மனதை விட்டு மறைவதற்குள்ளாகவே, தற்போது அருணாச்சலம் எனும் விசாரணைச் சிறைவாசி காவல் நிலையத்திலேயே அடித்துக் கொல்லப்பட்டிருப்பது மிகவும் வேதனையளிக்கும் ஒன்றாகும். ஆட்சி அமைந்து சில மாதங்களே ஆகின்ற சூழலில், அதற்குள்ளாகவே நான்கு சிறைவாசிகளின் காவல் மரணங்கள் நிகழ்ந்திருப்பது மாநில அரசின் கடுமையான நிர்வாகத் தோல்வியையே வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது.

முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில், இதுபோன்று நடந்த காவல் துறை மரணங்களின் போது ஆளும் வர்க்கத்திற்கு எதிராகச் சீறிய அன்றைய அரசியல் தலைவர்களும், தற்போதைய முதலமைச்சருமான விஜய், இப்போது தனது சொந்த ஆட்சியில் நடக்கும் இதுபோன்ற காவல் நிலைய மரணங்களுக்குத் தார்மீகப் பொறுப்பேற்றுப் பகிரங்கமாக வருத்தம் தெரிவிக்கவோ, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் குடும்பத்தைச் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவோ செய்யாதிருப்பது அதிகாரத் திமிரன்றி வேறென்ன? இது தம்மை நம்பி வாக்குச் செலுத்தி, ஆட்சியதிகாரத்தில் ஏற்றி வைத்த தமிழக மக்களுக்குச் செய்யப்படும் அப்பட்டமான ஜனநாயகத் துரோகம் இல்லையா?

தன்னுடைய ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காக ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையும் முடக்கி வைத்து கவனித்த முதலமைச்சருக்கு, அநியாயமாகப் பறிபோன ஓர் ஏழையின் உயிருக்கான நீதியைப் பெற்றுத் தர மனமில்லையா? ஆட்சியதிகாரமும், பதவி மமதையும் ஆட்சியாளர்களின் கண்ணை மறைக்கிறதா? ஏழை எளிய மக்களின் அழுகுரல்களும், ஒப்பாரியும், ஓலமும் உங்கள் செவிகளுக்கு வந்து சேரவில்லையா?

தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் பேசும்போது, முந்தைய ஆட்சியாளர்களின் கீழ் நடந்த காவல் நிலைய மரணங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, இப்போது உங்களது ஆட்சியில் பறிபோன உயிருக்கான நீதியை வழங்காமல், குற்றச் செயலில் ஈடுபட்டவர்களைக் காப்பாற்ற முயல்வது மிகவும் இழிவான செயல் ஆகும். தவெக அரசின் இத்தகையப் போக்கை நாம் தமிழர் கட்சி ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது, இதனை வன்மையாகக் கண்டிக்கிறது.

எப்பேர்ப்பட்ட குற்றவாளியாகவோ அல்லது கொலையாளியாகவோ இருந்தாலும், அரிதினும் அரிதான வழக்குகளுக்கு மட்டுமே மரணத் தண்டனையை நமது நாட்டின் நீதிமன்றங்கள் விதிக்கின்றன. அப்படியிருக்க, காவல்துறை தனது எதேச்சதிகாரப் போக்கோடு குற்றஞ்சாட்டப்பட்ட நபரின் மீது கோரத் தாக்குதல் தொடுத்து, அடித்தே கொன்று உயிரைப் போக்குவதை ஒருநாளும் நாகரிக சமூகம் ஏற்க முடியாது. எந்தக் குற்றமிழைத்தவராயினும் அவருக்கான சட்டப்பூர்வ தண்டனையை நீதிமன்றத்தின் மூலம் பெற்றுத் தருவதே ஜனநாயக வழிமுறை. அதை விடுத்து, காவல்துறையினரே கை, கால்களை உடைப்பதும், உயிரைப் பறிப்பதுமான கொடுஞ்செயல்கள் ஜனநாயகக் குடிமைச்சமூகத்தில் நிகழக்கூடாத பெரும் அவலமாகும்.

ஆகவே, காவல் நிலையத்தில் வைத்துப் படுகொலை செய்யப்பட்ட சிறைவாசி அருணாச்சலத்தின் மரணத்தைக் கொலை வழக்காக (302) உடனடியாகப் பதிவு செய்து, அதில் தொடர்புடைய காவல் துறை அதிகாரிகளையும், ஊழியர்களையும் விரைந்து கைது செய்ய வேண்டும். மேலும், தன் தூணை இழந்த பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு சார்பில் ₹50 லட்ச ரூபாய் துயர்துடைப்புத் தொகையாக உடனடியாக வழங்கிட வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.