நீட் தேர்வு முறைகேடு: கல்வி அமைச்சர் ராஜினாமாவை வலியுறுத்தி நாளை நாடு முழுவதும் காங்கிரஸ் மெழுகுவர்த்தி பேரணி!
புதுடெல்லி: நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள ‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளைக் கண்டித்தும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறை நடத்திய தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாளை (ஜூலை 25) மாலை நாடு முழுவதும் மெழுகுவர்த்தி பேரணி நடத்த காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வ அழைப்பு விடுத்துள்ளது.
நீட் தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி, ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ (CJP) அமைப்பினர் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்குப் பல்வேறு அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் தங்களது ஆதரவை வழங்கி வருகின்றன.
இதனிடையே, டெல்லியில் உள்ள இந்திய அரசியலமைப்பு கிளப் வளாகத்தில் மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோர் சி.ஜே.பி. பிரதிநிதிகளுடன் சுமார் இரண்டு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். நடுநிலையான இடத்தில் மட்டுமே பேச்சுவார்த்தை நடக்க வேண்டும் என்ற சி.ஜே.பி-யின் நிபந்தனையை ஏற்று இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
இந்தச் சூழலில், மாணவர்களின் போராட்டத்திற்கு முழு ஆதரவு தெரிவிக்கும் வகையில், காங்கிரஸ் அகில இந்தியக் கமிட்டியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் கட்சி நிர்வாகிகளுக்கு முக்கியக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
“காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் வழிகாட்டுதலின்படி, அனைத்து மாநில மற்றும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் நாளை (ஜூலை 25) மாலை தங்கள் எல்லைக்குட்பட்ட மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் மெழுகுவர்த்தி பேரணி மற்றும் சத்தியாகிரகப் போராட்டத்தை நடத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்.”
மேலும், இந்த மெழுகுவர்த்தி பேரணியானது மாவட்டத் தலைநகரங்களில் உள்ள மகாத்மா காந்தி அல்லது டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் சிலைகளை நோக்கிச் சென்று, அங்கு அமைதியான முறையில் முடிவடையும் வகையில் திட்டமிடப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் தேர்வு முறையின் நேர்மை முற்றிலும் சீர்குலைந்துவிட்டதாகவும், இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க மத்திய அரசு தவறிவிட்டதாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. எனவே, மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை இந்தப் பேரணியின் போது வலுவாக முன்வைக்குமாறு கட்சித் தொண்டர்களுக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உத்தரவிட்டுள்ளது.