தமிழ்நாட்டில் தவெக அரசு பதவியேற்று இன்றோடு 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அரசின் செயல்பாடுகள் குறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். முதல் 100 நாட்களில் வாக்களித்த மக்களின் மனதில் நம்பிக்கையை விதைப்பதற்குப் பதிலாக, இந்த அரசு ஏமாற்றத்தையும் அதிருப்தியையுமே பரிசளித்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அரசு நிர்வாகத்தை முழுமையாக முதல் 100 நாட்களில் மதிப்பிட முடியாது என்றாலும், அது செல்லும் திசையை இக்காலகட்டத்தைக் கொண்டே கண்டறிய முடியும் எனத் தெரிவித்துள்ள அவர், மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை விட்டுவிட்டு, சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் வெளியிடுவதையே ஆளுங்கட்சியினர் பிரதான வேலையாகச் செய்து வருவதாகக் விமர்சித்துள்ளார். மேலும், கொலை, கொள்ளை போன்ற குற்றச் சம்பவங்களால் சட்டம்-ஒழுங்கு கடுமையாகச் சீர்குலைந்துள்ளதாகவும், புதிய காவலர்களை நியமிக்காமல் இருக்கும் காவலர்களைக் கொண்டே அதிரடிப்படை அமைப்பதாக வேடிக்கையான அறிவிப்புகள் வெளியிடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களில் அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்கள் மீது புகார் எழுந்தும் உரிய விசாரணை நடத்தப்படவில்லை எனவும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதைப்பொருள் கலாச்சாரம் அதிகரித்துவிட்டதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு முன்பு வழங்கப்பட்ட பயிர்க்கடன் தள்ளுபடி வாக்குறுதி அரைகுறையாக நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், காவிரி நதிநீர் மற்றும் குறுவை சாகுபடி விவகாரங்களில் அரசு மெத்தனப்போக்கைக் கடைப்பிடிப்பதாகவும் விவசாயிகள் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாதந்தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம் என்ற வாக்குறுதிக்கு மாறாக, இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட் என ஏமாற்றப்பட்டுள்ளதாகவும், அறிவிக்கப்படாத இரவுநேர மின்வெட்டு மற்றும் திடீர் மின்கட்டண உயர்வு மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் டிடிவி தினகரன் கூறியுள்ளார். சென்னை மாநகராட்சியில் எதேச்சதிகாரமாக உயர்த்தப்பட்ட சொத்துவரி மக்களின் தொடர் எதிர்ப்புக்குப் பின் கைவிடப்பட்டதையும் அவர் தன் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசு மருத்துவமனைகளில் எலிகள் சுற்றித் திரிவது, அங்கன்வாடி மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் கேள்விக்குறியாக இருப்பது போன்ற அவல நிலைகளையும் அவர் அம்பலப்படுத்தியுள்ளார. பழனி மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில்களுக்குச் சொந்தமான நிலங்கள் தனிநபர் பெயரில் முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக வரும் நில மோசடி புகார்களை அரசு கண்டும் காணாமல் இருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
நிதிநிலை அறிக்கையானது மக்களுக்கும் மாநிலத்திற்கும் எந்த வகையிலும் பயனளிக்கவில்லை என்றும், கடுமையான நிதி நெருக்கடிக்கு நடுவிலும் தலைமைச் செயலகத்தில் பல கோடி ரூபாய் செலவில் முதலமைச்சர் தனது அறையை மாற்றுவதிலும், விளம்பர மோகத்திலுமே கவனம் செலுத்துவதாகவும் அவர் விமர்சித்துள்ளார். ஒட்டுமொத்தமாக, நிர்வாகக் குழப்பம், திட்டமிடலின்மை மற்றும் ரீல்ஸ் மோகம் மட்டுமே இந்த 100 நாள் தவெக ஆட்சியின் அடையாளங்களாக மாறியுள்ளதாகத் தெரிவித்துள்ள டிடிவி தினகரன், இனியாவது மக்கள் பயனடையும் ஆக்கப்பூர்வமான பாதையில் அரசு பயணிக்க முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.