தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற “மார்ச் பார் லைப்” எனும் கத்தோலிக்க மத அமைப்பின் கருக்கலைப்புக்கு எதிரான நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சியில் அவர் பேசிய கருத்துகள் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. “கருக்கலைப்பு செய்வதற்கு நமக்கு உரிமை இல்லை”, ஒவ்வொரு குழந்தையும் “கடவுள் கொடுத்த பரிசு” என்று அவர் பேசியது, பெண்களின் இனப்பெருக்க உரிமைகளுக்கும், சட்டப்பூர்வமான கருக்கலைப்பு உரிமைகளுக்கும் எதிரானது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது.
இது தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டப்பேரவைத் தலைவர் வகிக்கும் உயரிய அரசியலமைப்புச் சட்ட பதவிக்கு, இத்தகைய மத அடிப்படையிலான பிற்போக்கான கருத்துகள் களங்கத்தை ஏற்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார். ஒரு பெண்ணின் உடல் சார்ந்த முடிவுகள், அவரது கண்ணியம், சமத்துவம் மற்றும் உளநலத்துடன் தொடர்புடையவை. இவற்றை ஒரு மதக் கோட்பாட்டின் மூலம் தீர்மானிக்க முடியாது.
இந்தியாவில் 1971-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மருத்துவ ரீதியான கருக்கலைப்புச் சட்டம் (MTP Act – 1971), உலக நாடுகளிலேயே ஓரளவு முற்போக்கான சட்டமாகக் கருதப்படுகிறது. தாய்-சேய் நலம், பெண்ணுரிமை மற்றும் மருத்துவத் தேவைகளைக் கருத்தில் கொண்டே இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. கடந்த 50 ஆண்டுகளில் இச்சட்டம் மூன்று முறை திருத்தப்பட்டு, திருமணமாகாத பெண்கள் மற்றும் 24 வாரங்கள் வரையிலான கர்ப்பங்களைக் கலைக்க சட்டப்பூர்வ அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உலகளவில் எகிப்து, மால்ட்டா உள்ளிட்ட நாடுகளில் கருக்கலைப்புக்குத் தடை உள்ள நிலையில், இந்திய சட்டம் பெண்களுக்குப் பாதுகாப்பை அளித்து வருகிறது.
சட்டப்பூர்வமான கருக்கலைப்பு முறைகள் உள்ள நாடுகளில் 90% கருக்கலைப்புகள் பாதுகாப்பானதாக உள்ளன. ஆனால், கருக்கலைப்பு தடைசெய்யப்பட்ட அல்லது கட்டுப்பாடுள்ள நாடுகளில் பாதுகாப்பற்ற முறைகளைப் பின்பற்றுவதால் பெண்கள் பெரும் உயிரிழப்புகளைச் சந்திக்கின்றனர். குறிப்பாக, இந்தியாவில் பாதுகாப்பற்ற கருக்கலைப்புகளால் நாளொன்றுக்கு சராசரியாக 8 பெண்கள் உயிரிழக்கின்றனர். நாட்டின் பேறுகால மரணங்களில் 8 முதல் 13 விழுக்காடு பாதுகாப்பற்ற கருக்கலைப்புகளால் மட்டுமே ஏற்படுவது கவலையளிக்கும் விஷயமாகும்.
அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலேயே குடியரசுக் கட்சி ஆளும் சில மாகாணங்களில் கருக்கலைப்புத் தடைக்கு எதிராகப் பெண்கள் பெரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இத்தகைய சூழலில், அரசுப் பதவியில் இருப்பவர்கள் கருக்கலைப்புக்கு எதிரான மதவாதப் போதனைகளை முன்னெடுப்பது, பெண்களைச் சமூக ரீதியாகக் களங்கப்படுத்துவதோடு, ஆபத்தான மருத்துவ முறைகளை நாடவும் தூண்டும்.
முடிவாக, ஜே.சி.டி. பிரபாகர் தனது பதவியின் கண்ணியத்தைக் கருத்தில் கொண்டு, இத்தகைய மத நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும், பெண்களின் உரிமைகளுக்கு எதிரான கருத்துகளைப் பேசுவதையும் கைவிட வேண்டும் என்று மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். மதச்சார்பற்ற கொள்கையையும், அறிவியல் ரீதியான கண்ணோட்டத்தையும் ஒரு அரசுப் பிரதிநிதி கடைபிடிக்க வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக்கொண்டுள்ளது.