புதுடெல்லி:
யூனியன் பிரதேசமான லடாக்கின் லே பகுதியில் இன்று அதிகாலை திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.5 ஆகப் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதி முழுவதும் பலத்த அதிர்வுகள் உணரப்பட்டதுடன், பொதுமக்களிடையே பெரும் அச்சமும் பீதியும் ஏற்பட்டுள்ளது.
தேசிய நில அதிர்வு மையத்தின் தகவல்படி, லடாக் லே பகுதியில் இன்று அதிகாலை 6.05 மணியளவில் இந்த நிலநடுக்கம் திடீரெனத் தாக்கியுள்ளது. பூமிக்கு அடியில் மிகக் குறைந்த ஆழமான வெறும் 10 கிலோமீட்டர் ஆழத்தில்தான் இந்த நிலநடுக்கத்தின் மையம் அமைந்துள்ளது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
பொதுவாக, பூமிக்கு அடியில் ஆழம் குறைவாக ஏற்படும் இது போன்ற நிலநடுக்கங்களால் பூமியின் மேற்பரப்பில் அதிர்வுகளின் தாக்கம் மிகவும் தீவிரமாக இருக்கும். நில அதிர்வு அலைகள் மிகக் குறைந்த தூரத்திலேயே மேற்பரப்பைச் சென்றடைவதால், கட்டிடங்களுக்கு கடுமையான சேதம் அல்லது விரிசல்கள் ஏற்படும் அபாயம் அதிகமாக இருக்கும் என்று புவியியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். காலை சரியாக 6 மணி 5 நிமிடம் 15 வினாடிகளில் இந்த நிலநடுக்கம் பதிவானதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்தச் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் காரணமாக லே மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பீதியடைந்து வீடுகளைவிட்டு வெளியே வந்து வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். திடீரென ஏற்பட்ட பலத்த அதிர்வால் வீடுகளில் இருந்த பாத்திரங்கள் மற்றும் பொருட்கள் கீழே விழுந்து உடைந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இருப்பினும், அதிர்ஷ்டவசமாக இந்த நிலநடுக்கத்தால் இதுவரை எந்தவிதமான உயிர்ச்சேதமோ அல்லது பெரிய அளவிலான பொருட்சேதமோ ஏற்பட்டதாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. லடாக் மற்றும் ஒட்டுமொத்த இமயமலைப் பகுதியானது புவியியல் ரீதியாக நில அதிர்வுகள் எளிதில் ஏற்படக்கூடிய (Seismic Zone) மிகவும் உணர்திறன் வாய்ந்த பகுதியாகக் கருதப்படுவதால், இச்சம்பவம் அப்பகுதியில் கூடுதல் எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தs தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் மற்றும் பேரிடர் மீட்புப் படை அதிகாரிகள் நிலைமையை மிகத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். மேலும், அடுத்தடுத்து அதிர்வுகள் (Aftershocks) ஏதேனும் ஏற்படுகிறதா என்பது குறித்தும் நிபுணர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலைப்பாங்கான இந்தப் பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம் பாதுகாப்புத் தரப்பினரிடையே தற்காலிகமாகப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.