சென்னை:
எல் நினோ (El Nino) காரணியால் தமிழ்நாட்டில் ஏற்படக்கூடிய பருவநிலை தாக்கங்கள் மற்றும் வறட்சிப் பாதிப்புகளை முன்கூட்டியே தடுத்து, அவசர கால முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்வது குறித்து ஆலோசனைகள் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள நிபுணர்கள் ஆலோசனைக் குழுவின் முதல் கூட்டம் இன்று நடைபெற்றது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தலைமையில் சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கால செயல்பாட்டு மையக் கூட்ட அரங்கில் இந்தக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
முதலமைச்சரின் ஆலோசனையின்படி, பல்வேறு துறைகளில் அனுபவம் வாய்ந்த நிபுணர்களைக் கொண்டு இந்த ஆலோசனைக் குழு கடந்த ஜூலை 28 அன்று உருவாக்கப்பட்டது. கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் நா.முருகானந்தம் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாநிலத்தின் தற்போதைய பருவமழை நிலவரம் மற்றும் எதிர்காலச் சவால்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, தென்மேற்குப் பருவமழை காலமான ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தமிழகத்தில் வழக்கமாக 133.75 மி.மீ. மழை பெய்ய வேண்டும். ஆனால், நடப்பாண்டில் 111.19 மி.மீ. மட்டுமே மழை பொழிந்துள்ளது. இது வழக்கத்தை விட 16.68 சதவீதம் குறைவாகும். மாநிலத்திலுள்ள 38 மாவட்டங்களில் சுமார் 24 மாவட்டங்களில் இயல்பை விடக் குறைந்த அளவே மழை பெய்துள்ளது. குறிப்பா செங்கல்பட்டு, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் நாமக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் இயல்பை விட 60 சதவீதத்திற்கும் அதிகமாக மழை குறைந்துள்ளது. வழக்கமாக இக்காலக்கட்டத்தில் மாநில அணைகள் 85 சதவீதம் நிரம்பியிருக்கும் நிலையில், இந்த ஆண்டு போதிய மழையின்றி 31 சதவீதம் மட்டுமே அணைகள் நிரம்பியுள்ளன.
இந்த வறட்சிச் சூழலைச் சமாளிக்கவும், பொதுமக்களுக்குத் தடையின்றிப் பாதுகாப்பான குடிநீர் வழங்குவதையும் உறுதி செய்யத் தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நகராட்சி நிருவாகம், குடிநீர் வழங்கல் மற்றும் ஊரக வளர்ச்சித் துறைகள் வாயிலாக நீர் ஆதாரங்களை மேம்படுத்தவும், தேவைப்படும் இடங்களில் லாரிகள் மூலமாகத் குடிநீர் விநியோகம் செய்யவும் முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் ரூ.330 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கால்நடைகளின் பாதுகாப்பிற்கும், தீவனத் தேவைகளுக்காகவும் மீன்வளம் மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறைக்கு ரூ.10 கோடி என மொத்தம் ரூ.340 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து, துறைத் தலைவர்களிடம் இருந்து பெறப்பட்ட முன்மொழிவுகளின் அடிப்படையில் அரசுக்கு உரிய பரிந்துரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் மாநிலத்தில் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் வறட்சிப் பிரச்சினைகள் வராமல் தடுத்து, பொதுமக்களுக்கும் கால்நடைகளுக்கும் உடனடி நிவாரணம் வழங்குவதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளர் கே.எஸ். பழனிசாமி, பேரிடர் மேலாண்மை ஆணையர் அ. சிவஞானம் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர் குழு உறுப்பினர்கள் எஸ். கண்மணி, பாலாஜி நரசிம்மன், அறிவுடை நம்பி அப்பாதுரை, ரமேஷ் ராமச்சந்திரன், ஆர். வெங்கடேசன், ஜா.க. பேட்டர்சன் எட்வர்ட், ஆர். பிரதீப் ஜான் உள்ளிட்ட பல அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.