சென்னை:

தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்றம் மிக முக்கியமான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தின் போது முதலமைச்சர் விஜய் மற்றும் பெண்கள் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறப்படும் புகாரின் பேரில், தஞ்சாவூர் காவல்துறையினர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து, சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து காவல்துறை அவரை இன்று காலை கைது செய்து தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்றது.

இந்தக் கைது நடவடிக்கைக்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் அமர்வில் இன்று பிற்பகலில் விசாரணைக்கு வந்தது.

வழக்கு விசாரணையின் போது, உதயநிதி ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வாதிடுகையில், “முதலமைச்சர் குறித்தோ அல்லது எந்தத் திரைத்துறையினர் குறித்தோ எந்தவிதமான அவதூறு கருத்துக்களையும் அவர் தெரிவிக்கவில்லை. பெண்களின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையிலும் அவர் பேசவில்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அவரது பேச்சு தவறாகத் திரித்துப் பிரசாரம் செய்யப்படுகிறது. குறிப்பாக, நாளை தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கூடவுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவரை முடக்கும் நோக்கத்தோடு திட்டமிட்டு இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று வாதிட்டார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் கூறுகையில், “உதயநிதி ஸ்டாலினை காவலில் வைக்கும் அல்லது சிறையில் அடைக்கும் எந்தவிதமான எண்ணமும் அரசுக்கு இல்லை. தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்லப்படும் உதயநிதியிடம் முறைப்படி விசாரணை நடத்தப்பட்டு, பின்னர் காவல் நிலைய ஜாமினில் அவர் உடனடியாக விடுவிக்கப்படுவார்” என்று நீதிமன்றத்தில் உறுதியளித்தார்.

அரசுத் தரப்பின் இந்த வாதத்தை பதிவு செய்துகொண்ட நீதிபதி ஜி.கே. இளந்திரையன், “இன்றிரவுக்குள்ளாக காவல்துறையினர் விசாரணையை முழுமையாக முடித்துவிட்டு, இன்றைக்குள்ளாகவே உதயநிதி ஸ்டாலினை விடுவிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார். மேலும், இந்தச் Sவிசாரணைக்கு உதயநிதி ஸ்டாலின் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார். உயர் நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவால் அரசியல் அரங்கில் நிலவிவந்த பதற்றம் சற்று தணிந்துள்ளது.