கோவையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் பேசியபோது, தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் உறவினர்கள் மீது போதைப்பொருள் கடத்தல் தொடர்பான புகார்கள் அதிர்ச்சியளிப்பதாகக் கூறினார். கடந்த மாதம் 27ஆம் தேதி அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில், ஜான் பிரிட்டோ, ஜான் கென்னடி ஆகியோர் கோவையைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது.
முதல்-அமைச்சர் விஜய் ஊழலற்ற ஆட்சியை வழங்க வேண்டும், மதுபோதை இல்லாத ஆட்சி என்பதே முக்கிய வாக்குறுதி என அவர் கூறியிருந்தார். இந்த நிலையில், தற்போதைய குற்றச்சாட்டை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும், ஆதவ் அர்ஜுனா த.வெ.க. அமைச்சரவையில் தொடர்வது முறையா என்ற கேள்வி எழுகிறது என்றும் கிருஷ்ணசாமி வலியுறுத்தினார்.
அவர் மேலும், “இந்த விவகாரத்தில் ஆதவ் அர்ஜுனாவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட நிதி உதவிக்கான பணம் யாருடையது என்பதை கண்டறிய வேண்டும். அது ஆதவ் அர்ஜுனா வழங்கிய பணம் என்றால், அந்த பணம் எங்கிருந்து வந்தது என்பதையும் விசாரிக்க வேண்டும். மத்திய அரசும் முழுமையாக விசாரிக்க வேண்டும். மேலும் சி.பி.ஐ. விசாரணையும் அவசியம்” என்று தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் தூய்மையான ஆட்சி நடைபெற வேண்டுமெனில், ஆதவ் அர்ஜுனாவை கட்சியிலிருந்தும், அமைச்சரவையிலிருந்தும் நீக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். அதேபோல், லீமா ரோஸ் எம்.எல்.ஏ.வுக்கு ரூ.5 ஆயிரம் கோடி சொத்து எங்கிருந்து வந்தது என்பதையும் விசாரிக்க வேண்டும். அவரையும் அ.தி.மு.க. நீக்க வேண்டும் எனக் கூறினார்.
உறவினர்கள் மீது குற்றச்சாட்டு வரும் போது, ஆதவ் அர்ஜுனா தானாகவே முன்வந்து பதவி விலக வேண்டும் என்றும், இதன் மூலம் அரசின் நம்பகத்தன்மை காக்கப்படும் என்றும் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தினார்.