இயக்குநர் இமயம் பாரதிராஜா தமிழ் சினிமாவின் வரலாற்றில் அழியாத தடம் பதித்தவர். “என் இனிய தமிழ் மக்களே” என்ற குரலால் மக்களை ஈர்த்த அவர், எளிய மக்களின் வாழ்க்கை உணர்வுகளை திரையில் தத்துவார்த்தமாக வெளிப்படுத்தி, சினிமாவை மக்கள் கலைவழி உயர்த்தியவர்.

ஸ்டூடியோ செட்களின் கட்டுப்பாட்டை உடைத்து, இயற்கை லொகேஷன்களில் படங்களை எடுத்தவர் பாரதிராஜா. ‘16 வயதினிலே’ படத்தின் மூலம் கமலையும், ரஜினியையும், ஸ்ரீதேவியையும், இளையராஜாவையும் இணைத்து தமிழ் சினிமாவுக்கு புதிய பரிமாணம் கொடுத்தார். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியடைந்து, அவரை இயக்குநர் இமயமாக உயர்த்தியது.

அவரது படங்களில் சாதி, மத பேதங்கள், சமூக அநீதி, பெண்களின் உரிமைகள் போன்றவை வலிமையாக பேசப்பட்டன. ‘கருத்தம்மா’ படத்தில் பெண் சிசுக் கொலைக்கு எதிராக அவர் எடுத்த நிலைப்பாடு தேசிய விருதை பெற்றது. ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘முதல் மரியாதை’, ‘கல்லுக்குள் ஈரம்’, ‘சிவப்பு ரோஜாக்கள்’, ‘மண்வாசனை’, ‘நாடோடி தென்றல்’, ‘பசும்பொன்’, ‘தமிழ்செல்வன்’ உள்ளிட்ட பல படங்கள் சமூக உணர்வுகளை வெளிப்படுத்தின.

பாரதிராஜா தனது படங்களில் புதிய நடிகர்களை அறிமுகப்படுத்தி, அவர்களை நட்சத்திரங்களாக மாற்றியவர். கே.பாக்யராஜ், ராதிகா, கார்த்திக், ராதா, விஜயசாந்தி, ரேவதி உள்ளிட்ட பலர் அவரின் படங்களின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்கள்.

அவரது வாழ்க்கை பயணம் தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் தொடங்கி, நாடக மேடைகளில் இருந்து சினிமா உலகின் உச்சிக்குச் சென்றது. இளையராஜா, கங்கை அமரன், பாஸ்கர், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஆகியோருடன் கொண்ட நட்பு வட்டம் தமிழ் சினிமாவுக்கு பல்வேறு படைப்புகளை அளித்தது.

40க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, இந்தி படங்களை இயக்கிய பாரதிராஜா, தனது தனித்துவமான கதை சொல்லும் பாணியால் ரசிகர்களின் மனதில் என்றும் நிலைத்திருப்பார். விருதுகள், பாராட்டுகள், பத்மஸ்ரீ போன்ற கவுரவங்கள் அவரை தேடி வந்தாலும், அவரின் உண்மையான வெற்றி ரசிகர்களின் புன்னகையிலும், கண்ணீரிலும், சிந்தனையிலும் தான்.

பாரதிராஜா இல்லாமல் போனாலும், அவர் படைத்த சினிமா உலகம் என்றும் வாழும். தமிழ் சினிமாவின் “முதல் மரியாதை”க்கு உரிய படைப்பாளி என்ற பெருமை அவருக்கே உரியது.