சென்னை: இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவுக்கு பல்வேறு திரைப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதில் இயக்குநரும் நடிகருமான பார்த்திபன், பாரதிராஜாவை நினைவுகூர்ந்து உணர்ச்சியோடு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “சினிமா என்றால் பாரதிராஜா; பாரதிராஜா என்றால் சினிமா என்கிற அளவுக்கு நமது மனதில் பதிந்துள்ளார். காலத்துக்கும் இது அப்படியே இருக்கும். என் இனிய தமிழ் மக்களே என்ற அந்த கம்பீரக் குரலை நாம் இனி கேட்க முடியாது. இப்படி ஒரு நாள் நாம் அழுதே தீருவோம் என தெரியும். ஆனால் இந்த அழுகை எப்படி தீரும்?” எனக் கூறினார்.
மேலும் அவர், “1977க்குப் பிறகு வந்த இயக்குநர்களின் படைப்புகளில் பாரதிராஜாவின் சாயல் தவறாமல் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு சினிமா சமூகத்தையே உருவாக்கியவர் அவர். நான் நேரடியாக பாரதிராஜாவிடம் பணிபுரியவில்லை, ஆனால் பாக்கியராஜிடம் பணிபுரிந்துள்ளேன். எனது அப்பா இறந்தபோது என்ன அழுகை வந்ததோ, அதைவிட அதிகமாக இவரின் மறைவு என்னை பாதித்துள்ளது. ஆனால் இது தவிர்க்க முடியாதது” என உணர்ச்சியோடு தெரிவித்தார்.
அவர் மேலும், “பாரதிராஜாவின் மறைவு ஈடுசெய்ய முடியாத ஒன்று. அவரின் சினிமா சரித்திரத்தில் கடந்த 50 ஆண்டுகள் பொற்காலமாகும். அவர் உருவாக்கிய படைப்புகள் தமிழ் சினிமாவுக்கு புதிய அடையாளம் அளித்தன. கிராமங்களின் உயிரோட்டம், மக்களின் உணர்வுகள், அன்பு, உறவு, போராட்டம் ஆகியவற்றை திரையில் காட்டியவர் பாரதிராஜா. அவரின் படைப்புகள் தலைமுறைகளைத் தாண்டி என்றும் நிலைத்திருக்கும்” எனக் கூறினார்.
பாரதிராஜாவின் மறைவு தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்லாது, இந்திய கலை உலகத்திற்கே பெரும் இழப்பாகக் கருதப்படுகிறது. அவரின் படைப்புகள் சினிமா சமூகத்தில் என்றும் வாழும்.