இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்: கண்ணீரில் விடை கொடுத்த தமிழ் திரையுலகம்

தமிழ் சினிமாவின் அடையாளமாகவும், மண்ணின் மணத்தை வெள்ளித்திரையில் கொண்டு வந்த ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா, நேற்று (ஜூன் 10) காலமானார். அவரது மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும், ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது உடல் இன்று தேனி மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த பண்ணை வீட்டில், முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இறுதி அஞ்சலி நிகழ்வுகள்

நேற்று மறைந்த பாரதிராஜாவின் உடல், இன்று காலை அவரது சொந்த மாவட்டமான தேனிக்குக் கொண்டு வரப்பட்டது. கொடைக்கானல் பிரிவு சாலைக்கு அருகிலுள்ள அவரது பண்ணை வீட்டின் முகப்பில், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏதுவாக அவரது உடல் வைக்கப்பட்டது. தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வந்து, தங்களுக்குப் பிடித்தமான கலைஞருக்குக் கண்ணீர் மல்க இறுதி மரியாதை செலுத்தினர். ரசிகர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் என இரு வேறு வழிகள் பிரிக்கப்பட்டு, நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

திரையுலக மற்றும் அரசியல் பிரமுகர்களின் வருகை

பாரதிராஜாவின் உடலுக்குத் திரையுலகினர், அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். நடிகைகள் ராதிகா, சுஹாசினி, நிரோஷா, கவிஞர்கள் வைரமுத்து, சினேகன், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம், மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன், முன்னாள் அமைச்சர் உதயகுமார் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

மேலும், நடிகர்கள் வடிவேலு, பார்த்திபன், சமுத்திரக்கனி, நிழல்கள் ரவி, கருணாஸ், விக்னேஷ், லட்சுமன், இயக்குநர்கள் ஆர். கே. செல்வமணி, ராம், பேரரசு, சீமான், வெற்றிமாறன், பொன்ராம் மற்றும் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் உள்ளிட்ட திரையுலகைச் சேர்ந்த ஏராளமானோர் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். நடிகைகள் ராதிகா மற்றும் நிரோஷா ஆகியோர் அதிகாலை முதல் இறுதிச் சடங்குகள் முடியும் வரை பாரதிராஜாவின் உடல் அருகிலேயே கண்ணீருடன் அமர்ந்திருந்தது அனைவரையும் நெகிழ வைத்தது.

அரசு மரியாதை மற்றும் நல்லடக்கம்

மாலை 4 மணியளவில் பாரதிராஜாவின் மகள் ஜனனி மற்றும் உறவினர்கள் இறுதிச் சடங்குகளைத் தொடங்கினர். பாரதிராஜாவின் உடல் தூய்மை செய்யப்பட்டு, மூங்கில் பாடையில் வைக்கப்பட்டு, இறுதி ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது. காவல்துறை அணிவகுப்புடன் கூடிய இந்த இறுதி ஊர்வலத்தில், தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் சி. டி. ஆர். நிர்மல்குமார் மற்றும் வன்னியரசு ஆகியோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து, 3 சுற்றுகளில் 72 குண்டுகள் முழங்க, காவல்துறை முழு அரசு மரியாதையுடன் பாரதிராஜாவுக்குக் கௌரவம் அளித்தது.

பின்னர், உறவினர்களின் இறுதிச் சடங்குகளுக்குப் பிறகு, பாரதிராஜாவின் உடல் பண்ணை நிலத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. தன் மண்ணின் மைந்தன் மண்ணுக்குள் உறங்குவதைக் கண்டு ரசிகர்கள் உணர்ச்சிப்பெருக்கில், பாரதிராஜாவின் புகழ்பெற்ற வசனமான, “என் இனிய தமிழ் மக்களே” என்று ஓங்கி முழக்கமிட்டு கண்ணீர் மல்க விடை கொடுத்தனர்.

பெரியகுளம் – திண்டுக்கல் பிரதான சாலையில் நடைபெற்ற இந்த இறுதி ஊர்வலத்தில், அந்த வழியாகச் சென்ற வாகனங்களில் இருந்தவர்களும் தங்களை அறியாமல் இறங்கி வந்து அஞ்சலி செலுத்தினர். பாதுகாப்பு ஏற்பாடுகளை டி. ஐ. ஜி. சசிமோகன், தேனி எஸ். பி. சினேகாபிரியா மற்றும் திண்டுக்கல் எஸ். பி. பிரதீப் ஆகியோர் மேற்பார்வையிட்டனர். தமிழ் சினிமாவின் ஒரு சகாப்தம் இன்று மண்ணோடு மண்ணாகக் கலந்தது.