தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பன்மொழித் திரைப்படங்களில் முன்னணி நாயகியாக வலம் வரும் காஜல் அகர்வால், தமிழக முதலமைச்சர் விஜய் குறித்துத் தனது பெருமிதத்தைப் பகிர்ந்துள்ளார்.

அரசியல் பயணம் குறித்து காஜல்: சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய காஜல் அகர்வால், “விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது. திரையிலும், நிஜ வாழ்க்கையிலும் அவர் மிகச்சிறந்த மனிதர். பெரிய இலக்குகளை அடைவதற்காகவே பிறந்தவர் அவர். அவருடைய இந்த அரசியல் பயணம் எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது,” என்று குறிப்பிட்டுள்ளார்.

வாக்களிக்க ஆசை: மேலும், தமிழக அரசியலில் விஜய்யின் வளர்ச்சியைப் புகழ்ந்த அவர், “நானும் தமிழ்நாட்டின் வாக்காளராக இருந்து, அவருக்கு எனது வாக்கைச் செலுத்தியிருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்,” எனத் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தி இந்தியா ஸ்டோரி: காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படம், ஜூலை 24-ஆம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சாகர் பி. ஷிண்டே தயாரிப்பில், டி.கே. சேட்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், பாலிவுட் நடிகர் ஷ்ரேயாஸ் தல்படே கதாநாயகனாக நடித்துள்ளார். காஜல் அகர்வாலின் இந்த அரசியல் சார்ந்த கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் பெரிதும் பேசப்பட்டு வருகின்றன.