தேனி: இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவுக்குப் பின், அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் உறவினர்கள் உருக்கத்துடன் நினைவுகளை பகிர்ந்துள்ளனர். “அண்ணன் அனைவரையும் அழைத்து விருந்து வைத்து சந்திப்பு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் அந்த ஆசை நிறைவேறாமலே மறைந்துவிட்டார்” என அவர்கள் சோகத்துடன் தெரிவித்தனர்.

பாரதிராஜா (85) தேனி அல்லிநகரம் கீரைக்கல் தெருவைச் சேர்ந்தவர். பெற்றோர் பெரியமாயத்தேவர், கருத்தம்மா. இளம் வயதிலேயே கலைத்துறையில் ஆர்வம் கொண்ட அவர், குடும்ப சூழ்நிலை காரணமாக அரசு சுகாதார ஆய்வாளராகவும், பங்க் ஊழியராகவும் பணியாற்றினார். பின்னர் நாடகங்களில் நடித்து கலைப்பயணத்தைத் தொடங்கினார்.

அவரது தங்கை பாரதி கூறுகையில், “அண்ணனுக்கு என் மீது அலாதி பாசம். அதனால் சின்னச்சாமி என்ற இயற்பெயரை மாற்றி, என் பெயரின் முதல் வார்த்தையையும், அண்ணன் ஜெயராஜ் பெயரையும் இணைத்து ‘பாரதிராஜா’ என்று வைத்துக் கொண்டார். சிறுவயதிலேயே கதை சொல்லுதல், நாடகம் நடத்துதல் ஆகியவற்றில் ஆர்வம் கொண்டவர். பின்னர் சென்னை சென்று சினிமா துறையில் பல சாதனைகள் படைத்தார்” என்றார்.

உறவினர்கள் சுப்புராஜ், ரவி ஆகியோர் கூறுகையில், “சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஊருக்கு அடிக்கடி வந்தார். உறவினர் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அப்போது அனைவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைந்தார். அனைவரையும் அழைத்து விருந்து வைத்து சந்திப்பு நடத்த வேண்டும் என்று அடிக்கடி கூறுவார். ஆனால் மகன் மனோஜ் இறப்புக்குப் பிறகு மனதளவில் பாதிக்கப்பட்டார். அதனால் அந்த ஆசை நிறைவேறாமல் போனது. அவர் அடிக்கடி ‘என் உடல் தேனி மாவட்ட தேவதானப்பட்டி காட்ரோடு தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட வேண்டும்’ என்று கூறுவார். அவரது விருப்பப்படி உடல் தேனிக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்படுகிறது” என்றனர்.

பாரதிராஜாவின் மனைவி சந்திரலீலா. பிள்ளைகள் மனோஜ், ஜனனி. மனோஜ் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நிலையில், ஜனனி மலேசியாவில் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்.

அல்லிநகரம் போன்ற கிராமப்புறத்தில் பிறந்து, தமிழ் சினிமாவில் உச்சம் தொட்ட பாரதிராஜாவின் மறைவு, தேனி மக்களை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனை முன்னிட்டு, தேனி பங்களாமேட்டில் மாலை நேரத்தில் ரசிகர்கள் மன்றம் சார்பில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற உள்ளது.