புதுடெல்லி: உத்தர பிரதேசத்தின் புனித நகரமான வாராணசியில் ரூ.100 கோடி மதிப்பில் பிரம்மாண்டமான ஆக்சிஜன் பூங்கா உருவாக்கப்பட உள்ளது. பிரதமர் மோடியின் மக்களவைத் தொகுதியான இங்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் நடைமுறையில் உள்ளன.

வாராணசியின் பேலுபூர் பகுதியில் 20 ஏக்கரில் ‘சிவ தீம் பார்க்’ என்ற பெயரில் இந்த பூங்கா அமைக்கப்படுகிறது. காசி விஸ்வநாதர் கோயிலை மையமாகக் கொண்டு, உலகத் தரத்தில் ஆன்மிக அமைதியையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் இணைக்கும் வகையில் பூங்கா வடிவமைக்கப்படுகிறது. அடுத்த 8 முதல் 9 மாதங்களில் நடைபாதைகள், குழந்தைகளுக்கான நவீன விளையாட்டு வசதிகள், திறந்தவெளி கலை அரங்கம், முதியோர் நூலகம், வாகன நிறுத்துமிடம், உணவகங்கள் ஆகியவை உருவாக்கப்படுகின்றன.

மேலும், காசியைச் சேர்ந்த பத்ம விருது பெற்றோர் மற்றும் முக்கிய பிரமுகர்களின் சாதனைகள் காட்சிப்படுத்தப்படும். இளைஞர்களையும் குழந்தைகளையும் விண்வெளி அறிவியல் மற்றும் வானியல் துறைகளில் ஈர்க்கும் வகையில் கோளரங்கம் அமைக்கப்படுகிறது. காசியின் தொன்மையான பாரம்பரியம், புராணக் கதைகள், வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில்கள் ஆகியவற்றை எடுத்துரைக்கும் வகையில் நவீன டிஜிட்டல் அருங்காட்சியகம் உருவாக்கப்படுகிறது.

முக்கியமாக, 130 அடி உயரத்தில் உலகின் மிகப்பெரிய சிவலிங்கம் இங்கு நிறுவப்பட உள்ளது. தற்போது கேரளாவின் செங்கலில் 111 அடி மகாலிங்கம் உள்ளது. பிஹாரின் கிழக்கு சம்பரானில் கட்டப்பட்டு வரும் விராட் ராமாயணக் கோயிலிலும் 33 அடி உயர சிவலிங்கம் நிறுவப்படுகிறது. அந்த சிவலிங்கத்தை தமிழ்நாட்டின் மகாபலிபுரம் சிற்பிகள் வடித்து பிஹாருக்கு அனுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய பூங்கா, வழிபாட்டு தலமாக மட்டுமல்லாமல் சுற்றுச்சூழல், அறிவியல், நகர்ப்புற சுற்றுலா ஆகியவற்றின் முக்கிய மையமாகவும் விளங்கும்.