சென்னை: விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற நகை கொள்ளை வழக்கில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்துள்ள பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், “தவெக குற்றவாளிகளின் கூடாரமாக மாறுகிறதா?” என்ற கேள்தியை எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கட்சியின் ஒழுங்கு மற்றும் பின்னணி சரிபார்ப்பு குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
விருதுநகர் கொள்ளை சம்பவம்: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள ஒரு வீட்டில் தனியாக இருந்த பெண்ணைக் கட்டிப்போட்டு, சுமார் 21 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையின் முடிவில், இக்கொள்ளை சம்பவத்தில் தவெகவின் மாவட்ட இளைஞரணி இணை செயலாளரான சரவண குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தவெக நிர்வாகி சரவண குமார் தான் ஒட்டுமொத்த கொள்ளைச் சம்பவத்திற்கும் மூளையாகச் செயல்பட்டுள்ளார் என்ற கூடுதல் தகவல் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரு வீட்டைத் தொடர்ந்து நோட்டமிட்டு, அங்கு யார் வருகிறார்கள் போகிறார்கள் என்பதைத் துல்லியமாகக் கணக்கிட்டு, பெண் தனியாக இருக்கும் போது கைவரிசை காட்டத் திட்டம் போட்டுக் கொடுத்தது ஒரு அரசியல் கட்சி நிர்வாகி என்பது சமூகத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
நயினார் நாகேந்திரனின் கண்டனம்: இது குறித்துக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், கைதேர்ந்த ஒரு குற்றவாளிக்கு தவெக கட்சி எதன் அடிப்படையில் இளைஞரணியில் பொறுப்பு வழங்கியது என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், சம்பந்தப்பட்ட நபரின் பின்புலத்தை முறையாக ஆராயாமல் கட்சியில் பதவி வழங்கிவிட்டு, குற்ற வழக்குகளில் சிக்கியவுடன் பெயரளவுக்குக் கட்சியை விட்டு நீக்கினால் மட்டும் அனைத்தும் சரியாகிவிடுமா என்றும் அவர் சாடியுள்ளார்.
“தவெகக்காரன்” என்ற முகமூடியை அணிந்து கொண்டு இன்னும் எத்தனை கொள்ளையர்களும், பாலியல் குற்றவாளிகளும் மக்களிடையே சுதந்திரமாக உலவிக் கொண்டிருக்கிறார்களோ தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், தமிழகத்தில் சட்டம், ஒழுங்கைத் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்-அமைச்சர், முதலில் தனது கட்சிக்குள் ஊடுருவியுள்ள குற்றவாளிகளைக் கண்டறிந்து உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.