கொல்கத்தா: மேற்கு வங்க சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ரிதப்ரதா பானர்ஜி, “நாங்கள்தான் உண்மையான திரிணமூல் காங்கிரஸ்” என வலியுறுத்தியுள்ளார். மேலும், தங்கள் அணியின் பலம் 58-ல் இருந்து 64 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடந்த மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி 294 தொகுதிகளில் 80 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. மம்தா பானர்ஜி தானும் போட்டியிட்ட தொகுதியில் தோல்வியடைந்தார். இதனால் கட்சிக்குள் ஏற்பட்ட உட்கட்சிப் பூசல் காரணமாக, எம்எல்ஏக்களில் ஒரு பிரிவினர் அபிஷேக் பானர்ஜிக்கு எதிராக செயல்படத் தொடங்கினர்.

மம்தா பானர்ஜி, எதிர்க்கட்சித் தலைவராக சொவன்தேப் சட்டோபாத்யாயை அறிவித்த நிலையில், எதிர் தரப்பினர் ரிதப்ரதா பானர்ஜியை முன்னிறுத்தினர். 80 எம்எல்ஏக்களில் 58 பேர் ரிதப்ரதாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். சபாநாயகர் ரதிந்திர போஸ் அவரை எதிர்க்கட்சித் தலைவராக அறிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரிதப்ரதா, “மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் எங்கள் பக்கம் உள்ளனர். சபாநாயகர் எங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளார். தற்போது எங்கள் அணியின் பலம் 64 ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலான எம்எல்ஏக்களும், எம்பிக்களும் எங்கள் அணிக்கு ஆதரவளிக்கின்றனர். நாங்கள்தான் உண்மையான திரிணமூல் காங்கிரஸ். காங்கிரஸ் கட்சியுடன் இணையப்போவதாக வெளிவரும் தகவல்கள் உண்மையல்ல. மக்களவையில் உள்ள அதிருப்தி எம்பிக்கள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தொடர்ந்து ஆதரவளிப்பார்கள்” எனத் தெரிவித்தார்.

இதற்கிடையில், மம்தா பானர்ஜி டெல்லியில் சோனியா காந்தியை சந்தித்து ஆலோசனை நடத்தியதோடு, அபிஷேக் பானர்ஜி ராகுல் காந்தியையும் சந்தித்தார். இதனால் திரிணமூல் காங்கிரஸின் உட்கட்சிப் பிரச்சினை மேலும் தீவிரமடைந்துள்ளது.