ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்தில் உள்ள லட்சுமண் சந்தா கிராம மக்கள், தங்களது பிள்ளைகளை அரசு பள்ளிகளில் மட்டுமே சேர்க்க வேண்டும் என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

சமீபத்தில் கிராம மக்கள் ஒன்று கூடி, பிள்ளைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் குறித்த ஆலோசனையை நடத்தியனர். பெரும்பாலும் விவசாயிகளாக உள்ள இந்த கிராம மக்கள், தனியார் பள்ளிகளில் சேர்க்காமல், அரசு பள்ளிகளில் மட்டுமே சேர்க்க வேண்டும் என முடிவு செய்தனர்.

அரசு பள்ளிகளில் தகுதியான ஆசிரியர்கள், விளையாட்டு மைதானம், அறிவியல் சோதனைக் கூடம் போன்ற வசதிகள் உள்ளன. இதனால் பிள்ளைகள் முழுமையான கல்வி பெறுவார்கள் என கிராம மக்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

இந்த முடிவை ஊராட்சி மன்ற தலைவி படிகலா லட்சுமி அறிவித்தார். “எங்கள் பிள்ளைகள் அரசு பள்ளிகளில் சேர்ந்து நல்ல கல்வி பெற வேண்டும். தனியார் பள்ளிகளில் சேர்க்க வேண்டாம் என்று அனைவரும் ஒருமனதாக தீர்மானித்துள்ளோம்” என அவர் கூறினார்.

இந்த தீர்மானம், அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தும் முயற்சியாகவும், கிராமப்புறங்களில் கல்வி சமத்துவத்தை வலியுறுத்தும் நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.