கொச்சி: கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் மகள் டி.வீணாவுக்கு, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.

வீணாவின் ‘எக்ஸாலாஜிக்’ என்ற செயல்பாட்டில் இல்லாத ஐடி நிறுவனம், சிஎம்ஆர்எல் நிறுவனத்துக்கு எந்தவொரு சேவையும் வழங்காமல், ஒப்பந்தம் என்ற பெயரில் ரூ.2.78 கோடி பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்த விவகாரத்தில், அமலாக்கத் துறை விசாரணை நடத்த தடையில்லை என்று கேரள உயர் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து, வரும் வெள்ளிக்கிழமை கொச்சி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு வீணாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இவருடன் சிஎம்ஆர்எல் நிறுவனத் தலைவர் சசிதரன் கர்த்தா உட்பட எட்டு அதிகாரிகளுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த மாதம் பினராயி விஜயன் மற்றும் வீணா உள்ளிட்டோரின் இல்லங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. அப்போது, வீணா தொடர்புடைய 242 வங்கிக் கணக்குகளில் இருந்த ரூ.18.36 கோடி முடக்கப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து சிபிஎம் கட்சியின் தலைவர் என்.என். கிருஷ்ணதாஸ், “வீணா திறமையான பெண் என்பதால் சட்டப்படி இதனை எதிர்கொள்வார். இதில் கட்சி தலை இடாது” எனத் தெரிவித்தார்.

இந்தச் சூழ்நிலை, கேரள அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.