சென்னை: தமிழக அரசுப் பள்ளிகளில் 18,107 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், அவற்றை உடனடியாக நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகளில் ஆயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் நீண்ட காலமாக காலியாக இருப்பது ஏழை மற்றும் நடுத்தர குடும்ப மாணவர்களின் கல்வியை கடுமையாக பாதிப்பதாக தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, மொத்தம் 1,14,248 ஆசிரியர் பணியிடங்களில் 96,141 ஆசிரியர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். மீதமுள்ள 18,107 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், அதில் 7,252 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், 2,833 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் அடங்குவதாகவும் கூறப்பட்டுள்ளது.

உண்மையில் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கக்கூடும் என்றும், பல ஆண்டுகளாக நிரப்பப்படாத பணியிடங்கள் ரத்து செய்யப்பட்ட பின்னரே இந்த கணக்குகள் வெளியிடப்பட்டுள்ளதாக அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், தொடக்கக் கல்வித்துறையிலும் சுமார் 16 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கலாம் எனக் குறிப்பிட்ட அவர், ஒட்டுமொத்தமாக 34 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும் சூழலில் தரமான கல்வியை வழங்குவது சாத்தியமில்லை என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 12 ஆண்டுகளில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் எண்ணிக்கையை ஒப்பிடும்போது, புதிய ஆசிரியர்கள் மிகக் குறைவாகவே நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவே அரசுப் பள்ளிகளின் கல்வித்தரம் குறைவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசுப் பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லாதது, அடிப்படை வசதிகள் பற்றாக்குறை மற்றும் கல்வித் தரம் குறைவு போன்ற காரணங்களால் மாணவர் சேர்க்கை தொடர்ந்து சரிந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமூக மாற்றத்தையும், கல்வி சமத்துவத்தையும் உருவாக்குவதில் அரசுப் பள்ளிகளின் பங்கு மிக முக்கியமானது என்பதால், காலியாக உள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங்களையும் விரைவாக நிரப்பி, அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த தமிழக அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.