சென்னை: பாரதீய ஜனசங்கத்தின் நிறுவனத் தலைவரும், நாட்டின் ஒற்றுமைக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த தலைவருமான டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜியின் நினைவு நாளையொட்டி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “அகண்ட பாரதத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த மாமனிதர் டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜியின் நினைவு நாளில், அவரது சேவைகளையும் தியாகங்களையும் போற்றி வணங்குவோம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “ஒரே நாடு, ஒரே அரசியலமைப்பு, ஒரே தேசிய கொடி” என்ற தேசிய சிந்தனையை வலியுறுத்தி, இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்காக இறுதிவரை போராடியவர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்பு சட்டப்பிரிவு 370-ஐ நீக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திய முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராக முகர்ஜி விளங்கியதாக எல்.முருகன் நினைவுகூர்ந்துள்ளார்.
அவரது தேசப்பற்று, தியாகம் மற்றும் தேசிய ஒற்றுமைக்கான பங்களிப்பு தலைமுறைகளுக்கு வழிகாட்டியாக இருக்கும் என்றும், அவரது உயரிய லட்சியங்களை பின்பற்றி வலிமையான மற்றும் வளமான பாரதத்தை உருவாக்க உறுதியேற்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஷ்யாமா பிரசாத் முகர்ஜியின் நினைவு நாளை முன்னிட்டு பாஜக மற்றும் அதன் தலைவர்கள் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.