திருச்சி: திருச்சியில் இன்று விவசாயக் கடன் குறித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், கவலையே படாதீர்கள் விவசாய மக்களே. இந்த விஜய் பொய் சொல்லி ஏமாற்றுவதற்கு அரசியலுக்கு வரவில்லை. உங்களுடன் நின்று வேலை செய்யத்தான் அரசியலுக்கு வந்திருக்கிறேன். இந்த ஒரு மாதத்தில் என்ன செய்ய முடியுமோ அதைத்தான் செய்திருக்கிறேன் என்று உறுதியளித்தார்.

தமிழக முதலமைச்சர் விஜய் கூட்டுறவு வங்கிகளில் இருந்து ஐம்பதாயிரம் ரூபாய் வரை மட்டுமே பயிர்க்கடன் தள்ளுபடி செய்வதாக அறிவித்தது கவலை அளிப்பதாகவும், தேர்தலுக்கு முன்பு அளித்த விவசாயக் கடன் வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றக் கோரியும் விவசாயிகள் தெரிவித்த நிலையில் விஜய் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.
இரண்டாயிரம் யூனிட் கட்டணமிலா மின்சாரம் அறிவித்தோம். அதில் ஏற்கனவே இருந்த நூறு யூனிட் இலவசம் என்பது திமுக கொடுக்கவில்லை. அது ஜெயலலிதா கொண்டு வந்த திட்டம். பதவி போன கோபத்தில் ஸ்டாலின் ஒரே அறிக்கையாக அடித்து விடுகிறார். நீங்கள் என்ன செய்தீர்கள்? உங்கள் ஆட்சியில் மக்கள் பணத்தை டாஸ்மாக்கில் கொள்ளையடித்த பணத்தை ஊழல் செய்த அந்த ஃபைலை மூடுவதற்கு அழைத்தீர்கள். ஆனால் நாங்கள் டாஸ்மாக் கடைகளை மூடினோம்.
விவசாயக் கடன் தள்ளுபடி செய்தோம். இந்த ஒரு மாதத்தில் என்ன செய்ய முடியுமோ அதைத்தான் செய்திருக்கிறோம். நீங்கள் நிதி சம்பந்தமாக இருக்கின்ற எல்லாக் கேடுகளையும் லாக் செய்து வைத்துப் போயிருக்கிறீர்கள். அதை எல்லாம் சரி செய்ய வேண்டாமா? ஒழுங்குப் படுத்த வேண்டாமா? அதனால் மறுபடியும் சொல்கிறேன். இந்த விஜய் பொய் சொல்லி ஏமாற்றுவதற்கு அரசியலுக்கு வரவில்லை. உங்களுடன் நின்று வேலை செய்யத்தான் அரசியலுக்கு வந்திருக்கிறேன். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. கவலையே படாதீர்கள் விவசாய மக்களே.
திமுகவும் பலரும் ஒன்றாகச் சேர்ந்துவிட்டு விஜய் ஆட்சி அமைக்கக் கூடாது என்று ஒரு கூத்து ஒன்று பண்ணார்களே. அந்த ஐந்து நாட்கள் இருக்கே. நமக்குல்லாம் ஆஹா இப்படி எல்லாம் கூட நடக்குமோ என்ன என்ன தோன்றியது. என்னா கூத்து. பியூச்சர் என்னவாக இருக்கும் என்று சொல்கிறேன். உண்மையாக மக்களுக்காக உழைத்த விஜய்யா? இல்லை இந்த விஜய்யோட ஆட்சி அமைக்கக் கூடாது என நினைத்த ஸ்டாலின் சாரா? அவ்வளவுதான். இதற்கு நடுவில் இரண்டு பேருக்கு மட்டுமே போட்டி.
அவர்கள் ஆட்சியிலேயே இல்லையே அவர்களை ஏன் விமர்சிக்கிறீர்கள்? ஏன் குறை சொல்கிறீர்கள் என்று சொல்கிறார்கள். வேரில் வெந்நீரை ஊற்றிவிட்டுச் சென்றவர்களை வெளிச்சம் போட்டுக் காட்டாமல் பின்ன வேறென்ன சொல்வார்கள்? இதெல்லாம் மக்களிடம் தெளிவாகச் சொல்ல வேண்டும் அல்லவா? என்று பேசினார்.
தமிழக முதலமைச்சர் விஜய் கடந்த வாரம் கூட்டுறவு வங்கிகளில் இருந்து ஐம்பதாயிரம் ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அதிரடியாக அறிவித்தார். இந்தத் திட்டம் முன்னோட்டம் இருந்த காலத்தில் மட்டுமே பொருந்தும் என்றும், மற்றவர்களுக்கு இது பொருந்தாது என்றும் அறிவித்திருந்தார். தேசியமயமாக்கப்பட்ட அல்லது தனியார் வங்கிகளில் பெற்ற கடன்களுக்கு இது பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் விஜய் தேர்தல் வாக்குறுதியின் போது அனைத்து விவசாயக் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் எனக் கூறியிருந்தார். எனவே கூட்டுறவு வங்கிகளில் இருந்து ஐம்பதாயிரம் ரூபாய் வரை மட்டுமே பயிர்க்கடன் தள்ளுபடி செய்வதாக அறிவித்தது கவலை அளிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். பல்வேறு இடங்களில் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இந்த நிலையில் இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் விஜய் பேசியுள்ளார்.