தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் தொடர்ந்து குறைந்து வருவதால், சந்தையில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பால் கொள்முதலை அதிகரிக்க உடனடியாக கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்றும் அவர் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆவின் நிறுவனத்தின் பால் வினியோகம் மாநிலம் முழுவதும் குறைந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக சென்னையில் மட்டும் தினசரி 2.5 லட்சம் லிட்டர் பால் வினியோகம் குறைந்துள்ளதாகவும், தமிழகம் முழுவதும் சுமார் 3 லட்சம் லிட்டர் அளவுக்கு விநியோகம் சரிந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
சென்னையில் கடந்த ஏப்ரல் மாதம் வரை தினசரி 16 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது அது 13.50 லட்சம் லிட்டராக குறைந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலை பொதுமக்கள், குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களை நேரடியாக பாதிப்பதாக அன்புமணி தெரிவித்துள்ளார்.
ஆவின் நிறுவனம் தற்போது தினசரி 28 லட்சம் லிட்டர் மட்டுமே பால் கொள்முதல் செய்து வருவதாகவும், இது கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க வீழ்ச்சியாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2021-ஆம் ஆண்டு தினசரி 41 லட்சம் லிட்டராக இருந்த பால் கொள்முதல், 2022-ல் 38 லட்சம் லிட்டராகவும், 2023-ல் 30 லட்சம் லிட்டராகவும் குறைந்த நிலையில் தற்போது 28 லட்சம் லிட்டராக சரிந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கோடை காலத்தின் தாக்கத்தால் பால் உற்பத்தி குறைந்திருப்பதாக ஆவின் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டாலும், கடந்த ஐந்து ஆண்டுகளாகவே பால் கொள்முதல் படிப்படியாக குறைந்து வருவது வேறு காரணங்களை சுட்டிக்காட்டுவதாக அன்புமணி கூறியுள்ளார்.
ஆவின் நிறுவனத்தின் பால் வினியோகம் குறைவதால் தனியார் பால் நிறுவனங்களின் மீது மக்கள் அதிகமாக சார்ந்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஆவின் பால் விலையை விட தனியார் நிறுவனங்களின் பால் விலை லிட்டருக்கு ரூ.16 முதல் ரூ.24 வரை அதிகமாக இருப்பதாகவும், இதனால் பொருளாதார ரீதியாக பலவீனமான குடும்பங்கள் கூடுதல் சுமையை சந்திக்க நேரிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பால் உற்பத்தியாளர்கள் ஆவினை விட தனியார் நிறுவனங்களுக்கு பால் வழங்குவதற்கான முக்கிய காரணம் கொள்முதல் விலையே என்றும் அவர் கூறியுள்ளார். தற்போது பசும்பாலுக்கு லிட்டருக்கு ரூ.35 மற்றும் எருமைப் பாலுக்கு ரூ.44 என்ற அடிப்படை விலையுடன் ரூ.3 ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தனியார் நிறுவனங்கள் இதைவிட லிட்டருக்கு ரூ.10 முதல் ரூ.12 வரை கூடுதலாக வழங்குவதால், விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் தனியார் நிறுவனங்களை நாடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலை தொடர்ந்தால் ஆவின் நிறுவனத்தின் சந்தை பங்கு மேலும் குறையும் அபாயம் இருப்பதாகவும், அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதற்காக பசும்பாலுக்கான கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.45 ஆகவும், எருமைப் பாலுக்கான விலையை ரூ.54 ஆகவும் உயர்த்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதன்மூலம் அதிக அளவில் பால் கொள்முதல் செய்து, பொதுமக்களுக்கு நியாயமான விலையில் தடையின்றி விநியோகம் செய்ய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பால் உற்பத்தியாளர்களின் நலனையும், பொதுமக்களின் தேவையையும் கருத்தில் கொண்டு ஆவின் நிறுவனத்தை வலுப்படுத்த தமிழக அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுத்துள்ளது.