சென்னை:

மத்திய அரசின் புதிய “வளர்ச்சியடைந்த பாரதம் – கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதார திட்டம்” (VB-GRAMG) தொடர்பாக முக்கிய மாற்றங்களை வலியுறுத்தி, தமிழக முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் பிரதமர் நரேந்திர மோடிக்கு விரிவான கடிதம் எழுதியுள்ளார். இந்த திட்டம் தற்போதைய வடிவில் அமல்படுத்தப்பட்டால் தமிழகத்திற்கு ஆண்டுக்கு ரூ.5,000 கோடிக்கும் அதிகமான கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

ஜூலை 1 முதல் அமலுக்கு வரவுள்ள VB-GRAMG திட்டம், தற்போதைய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திட்டத்தின் நிதிப்பகிர்வு முறை மற்றும் நிர்வாக கட்டுப்பாடுகள் மாநில அரசுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று தனது கடிதத்தில் முதல்-அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய வழிகாட்டுதலின்படி, ஊதியம், கட்டுமானப் பொருட்கள் மற்றும் நிர்வாகச் செலவுகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் 60:40 என்ற விகிதத்தில் நிதி பகிர்ந்து கொள்ள வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த இருபது ஆண்டுகளாக செயல்பட்டு வந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் இருந்த நடைமுறையை திடீரென மாற்றுவது மாநில நிதிநிலையை பாதிக்கும் என்று விஜய் தெரிவித்துள்ளார்.

இந்த மாற்றம் காரணமாக ஊரக தொழிலாளர்களுக்கான வேலை நாட்கள் குறையும் அபாயம் இருப்பதுடன், மாநில அரசின் பிற நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடும் குறையக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, ஊதியம் மற்றும் நிர்வாகச் செலவுகளை மத்திய அரசு 100 சதவீதம் ஏற்க வேண்டும் என்றும், கட்டுமானப் பொருட்கள் செலவில் மத்திய அரசு 75 சதவீதமும் மாநில அரசு 25 சதவீதமும் ஏற்கும் வகையில் மாற்றம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், கிராம ஊராட்சிகளை வகைப்படுத்துவதற்கும் நிதி ஒதுக்கீட்டை பகிர்ந்தளிப்பதற்கும் ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ள ஒரே மாதிரியான கணக்கீட்டு முறை, மாநிலங்களின் சமூக மற்றும் பொருளாதார வேறுபாடுகளை கருத்தில் கொள்ளவில்லை என்று விஜய் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் அடிமட்ட மக்களுக்கு சமச்சீரற்ற நிதி பகிர்வு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால் மாநில அரசுகளுக்கு தங்களது உள்ளூர் தேவைகள் மற்றும் நிலைமைகளின் அடிப்படையில் தனித்த நிதி பகிர்வு வழிமுறைகளை உருவாக்க அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

வேளாண் துறையை பாதிக்கும் விதமாக புதிய சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 60 நாட்கள் வேலை நிறுத்த விதிமுறையிலும் மாற்றம் தேவை என முதல்-அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். தற்போதைய விதிப்படி விதைப்பு மற்றும் அறுவடை காலங்களில் 60 நாட்களுக்கு பணிகள் நிறுத்தப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

ஆனால், எல் நினோ போன்ற காலநிலை மாற்றங்கள் காரணமாக விவசாய பருவங்கள் மாறுபடக்கூடும். எனவே, இந்த 60 நாட்கள் காலக்கட்டத்தை முன்கூட்டியே நிர்ணயிப்பதற்கு பதிலாக, மாவட்ட ஆட்சியர்களுக்கு சூழ்நிலைக்கேற்ப மாற்றி அறிவிக்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல், மாநில அரசின் வீட்டுவசதி திட்டங்களையும் VB-GRAMG திட்டத்துடன் இணைக்க அனுமதிக்க வேண்டும் என்று விஜய் கோரிக்கை விடுத்துள்ளார். தற்போதைய விதிகளின்படி மத்திய அரசின் வீட்டுவசதி திட்டங்கள் மட்டுமே இணைக்க அனுமதிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், திட்டங்களை ஒருங்கிணைக்கும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டும் என்றும், ஒவ்வொரு திட்டத்திற்கும் மத்திய அரசின் தனித்தனி ஒப்புதல் பெற வேண்டிய நடைமுறை நிர்வாக தாமதத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.

கடிதத்தின் இறுதியில், மகாத்மா காந்தியின் பெயரில் நீண்டகாலமாக செயல்பட்டு வந்த ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை மாற்றாமல், அதே பெயரில் தொடர வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு ஊரக வேலைவாய்ப்பு திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தும் மாநிலங்களில் ஒன்றாக தொடர்ந்து விளங்கி வருவதாக குறிப்பிட்டுள்ள அவர், தனது பரிந்துரைகளை மத்திய அரசு பரிசீலித்து தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.