நெல்லை: தமிழக அரசியலில் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே வார்த்தைப் போர்கள் முற்றியுள்ள நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திமுகவை மிகக் கடுமையான வார்த்தைகளால் சாடியுள்ளார். நெல்லையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக அரசியலில் ‘குதிரை பேரம்’ என்ற கலாச்சாரத்தைத் தொடங்கி வைத்ததே திமுகதான் என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். அதே வேளையில், தற்போதைய முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசுக்குத் தனது முழு ஆதரவையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

அதிமுக மீது குற்றம் சாட்ட திமுகவுக்கு தகுதியில்லை: அரசியலில் குதிரை பேரம் நடப்பதாக திமுக சாடி வரும் நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் வைகோ பேசியதாவது:

“குதிரை பேரம் என்கிற இழிவான அரசியல் வேலையைத் தமிழ்நாட்டில் முதன்முதலில் தொடங்கி வைத்ததே இந்த திமுகதானே? கடந்த காலங்களில் மதிமுக சார்பில் கம்பம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராமகிருஷ்ணனைப் பதவியை ராஜினாமா செய்ய வைத்தீர்கள். அதன்பின் நடைபெற்ற இடைத்தேர்தலில் அவரை திமுக சார்பில் போட்டியிட வைத்தீர்களே, அது என்ன பெருச்சாளி பேரமா? இந்த மாதிரியான மட்டமான வேலைகளை எல்லாம் செய்துவிட்டு, இப்போது யோக்கியன் போல அதிமுக மீது நீங்கள் குற்றம் சாட்டுகிறீர்கள்.”

என்று வைகோ ஆவேசமாக கேள்வி எழுப்பினார். மேலும், தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் மதிமுக போட்டியிடப் போவதில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

நெஞ்சில் குத்திவிட்டார்கள் – திமுக கூட்டணி கசப்புகள்: திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறியதற்கான காரணங்களை விவரித்த வைகோ, தங்களை திமுக நடத்திய விதம் குறித்து மிகுந்த வேதனை தெரிவித்தார். “திமுக கூட்டணியில் இருந்தபோது எங்கள் கட்சி தொடர்ந்து அவமதிக்கப்பட்டது. எங்களின் சுயமரியாதையைக் காக்கவே அந்தக் கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பலர் முதுகில் குத்துவார்கள், ஆனால் திமுக எங்களை முதுகில் குத்தவில்லை; நேராக நெஞ்சிலேயே குத்திவிட்டார்கள். தேர்தலின் போது எங்களை உதயசூரியன் சின்னத்தில் நிற்குமாறு பிடிவாதம் பிடித்துக் கட்டாயப்படுத்தினார்கள். ஆனால், எங்கள் கட்சியினர் உறுதியுடன் இருக்கிறார்கள். எங்கள் மீது திமுகவினர் சுமத்தும் வீண் குற்றச்சாட்டுகளை மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள்” என்று அவர் கூறினார்.

முதலமைச்சர் விஜய்க்குப் பாராட்டு: திமுகவை வன்மையாகக் கண்டித்த வைகோ, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தற்போதைய ஆட்சியைப் வெகுவாகப் பாராட்டினார். தமிழகத்தில் ஏற்பட்டு வரும் அரசியல் மாற்றங்களுக்கு மதிமுக என்றும் உறுதுணையாக இருக்கும் என்று உறுதியளித்த அவர், “தமிழகத்தில் இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சிதான் நடக்கும். அதுமட்டுமன்றி, அடுத்து வரும் தேர்தலிலும் அவரே மீண்டும் வெற்றி பெற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்பார். கடந்த திமுக ஆட்சியில் கொடிகட்டிப் பறந்த ஊழல்களை முதலமைச்சர் விஜய் முற்றிலும் ஒழித்துக் கட்டிவிட்டார். இதனால் இந்த அரசை மக்கள் பெரிதும் நேசிக்கிறார்கள். முன்பை விட இப்போது விஜய்க்கான மக்கள் ஆதரவு பல மடங்கு கூடியுள்ளது” என்றார்.

டெல்லி புத்தக வெளியீட்டு விழாவில் விஜய்: பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட வைகோ, கடந்த காலங்களில் பொடா (POTA) சட்டக் கொடுமைகளில் இருந்து பத்திரிகையாளர்களைப் பாதுகாத்தது மதிமுகதான் என்பதை நினைவுகூர்ந்தார். தொடர்ந்து தனது அடுத்தகட்ட திட்டங்கள் குறித்துப் பேசிய அவர், “வருகிற ஆகஸ்ட் 4-ஆம் தேதி டெல்லியில் என்னுடைய நாடாளுமன்ற உரைகள் அடங்கிய ஆங்கிலப் புத்தக வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் விஜய் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார். இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 15-ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா மதிமுக சார்பில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும்” என்று கூறி தனது பேட்டியை நிறைவு செய்தார்.