கோவை: அதிமுக முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தவெகவில் இணைந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதிமுகவின் மற்றொரு முக்கிய மூத்த தலைவரான எஸ்.பி.வேலுமணியின் பேட்டி அக்கட்சிக்குள்ளே இருக்கும் உட்கட்சிப் பூசலையும், அதிருப்தியையும் வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது. தங்களுக்கு எந்தவிதப் பதவிகளும் வேண்டாம் என்றும், கட்சியில் சாதாரண உறுப்பினர்களாகவே தொடர விரும்புவதாகவும் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
எடப்பாடிக்குக் கடிதம் எழுதிய மூத்த தலைவர்கள்: கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்குத் தாங்கள் எழுதிய கடிதம் குறித்து விரிவான விளக்கம் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:
“அதிமுகவில் அனைவரையும் அரவணைத்து, ஒருங்கிணைத்துச் செயல்பட வேண்டும் என்ற மிக நல்ல நோக்கத்திற்காகவே நாங்கள் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்குக் கடிதம் எழுதினோம். அந்த கடிதத்திலேயே நாங்கள் எல்லாவற்றையும் மிகவும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம். அந்தந்த மாவட்டங்களில் எத்தனையோ பேர் கட்சிக்காகத் தங்களின் உழைப்பைத் தந்துள்ளனர்.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் காலம் முதற்கொண்டும், இதயதெய்வம் அம்மா ஜெயலலிதா காலம் முதற்கொண்டும் கட்சிக்காக உண்மையாக உழைத்தவர்கள் பலர் இருக்கிறார்கள். மேலும், எடப்பாடி பழனிசாமி அவர்கள் முதலமைச்சராகப் பொறுப்பு வகித்த காலத்திலும் அவருக்காகவும், கட்சியின் வளர்ச்சிக்காகவும் அரும்பாடுபட்ட மூத்த நிர்வாகிகள் பலருக்குத் தற்போது கட்சியில் தகுந்த பதவிகள் வழங்கப்படவில்லை.”
என்று வேலுமணி தனது வருத்தத்தைப் பதிவு செய்தார்.
பதவி வேண்டாம் – சாதாரண உறுப்பினராகத் தொடர்கிறோம்: தொடர்ந்து பேசிய அவர், தங்களைப் போன்ற மூத்த தலைவர்கள் பதவிக்காக ஆசைப்படவில்லை என்பதைத் தெளிவுபடுத்தினார். “அதிமுகவில் உண்மையாக உழைத்தவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்காத காரணத்தினால்தான், நான் உட்பட நத்தம் விஸ்வநாதன், தங்கமணி என நாங்கள் யாருக்குமே இனி எந்தப் பதவியும் வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளோம். இது நாங்கள் ரத்தமும் சதையுமாய் வளர்த்து உருவாக்கிய கட்சி. எனவே, எந்தப் பதவியும் இல்லாமல் இந்த அதிமுகவில் சாதாரண தொண்டர்களாக, உறுப்பினர்களாக மட்டுமே தொடர்கிறோம் என்று எடப்பாடியாரிடம் கடிதம் மூலம் சொல்லிவிட்டோம். ஆனால், ஊடகங்கள்தான் இந்த விவகாரத்தைப் பல விதமாகத் திரித்து விவாதம் நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்” என்று அவர் சாடினார்.
அதிமுக மகளிர் அணி கூட்டம் புறக்கணிப்பா? நேற்று நடைபெற்ற அதிமுக மகளிரணி கூட்டம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “பொதுவாக அதிமுக மகளிரணி கூட்டத்திற்கு வளர்மதி அவர்கள் எங்களை எப்போதும் தவறாமல் கூப்பிடுவார். ஆனால், நேற்றைய கூட்டம் தொடர்பாக எங்களுக்கு எந்தத் தகவலும் சொல்லப்படவில்லை. அதற்கு முந்தைய நாளே நாங்கள் தலைமைக்குக் கடிதம் கொடுத்துவிட்டோம். ஒருவேளை, அந்த காரணத்தினால் கூட எங்களை அவர்கள் கூப்பிடாமல் இருந்திருக்கலாம்.
கடந்த 4-ஆம் தேதி கட்சியில் உழைத்தவர்களுக்குப் பதவிகள் எல்லாம் கொடுப்பார்கள் எனப் பலரும் எதிர்பார்த்தோம். ஆனால் யாருக்கும் வழங்கப்படவில்லை. அது ஏன் என்று நீங்கள் கட்சித் தலைமையிடமேதான் கேட்க வேண்டும். எங்களைப் பொறுத்தவரை கடிதத்தில் தெளிவாகச் சொல்லி இருக்கிறோம். இந்த இயக்கம் இன்னும் நன்றாக இருக்க வேண்டும். பொதுச்செயலாளர் உட்பட அனைவரும் ஈகோ பார்க்காமல் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்” என்று கூறினார்.
விஜயபாஸ்கர் தவெக-வில் இணைந்தது குறித்த கேள்விக்கு மௌனம்: பேட்டியின் இறுதிப் பகுதியில், முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களது 15 ஆயிரம் ஆதரவாளர்களுடன் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தது குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால், இந்தக் கேள்விக்கு எவ்வித பதிலும் அளிக்க விரும்பாத எஸ்.பி.வேலுமணி, உடனடியாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். மூத்த தலைவர்களின் இந்த அதிருப்தி கடிதம் மற்றும் வேலுமணியின் இந்த அதிரடிப் பேட்டி அதிமுக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.