சென்னை: காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கடுமையாக எதிர்க்கும் என்றும், தமிழக விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாக்கத் தொடர்ந்து போராடும் என்றும் அக்கட்சியின் மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவர் மாணிக்கம் தாகூர், எம்.பி. தலைமையில், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவரும், தமிழக சுற்றுலாத்துறை அமைச்சருமான செ. ராஜேஷ்குமார் முன்னிலையில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக அரசியல் சூழல் மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டு, 3 முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் 1: புதிய தலைவர் மாணிக்கம் தாகூருக்கு வரவேற்பு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைமைப் பரிந்துரையின் பேரில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மாணிக்கம் தாகூருக்கு இக்கூட்டம் மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டது. தமிழகத்தில் 1967-க்குப் பிறகு காங்கிரஸ் ஆட்சியில் பங்கு பெற முடியாத நிலை நீடித்த சூழலில், தற்போதைய த.வெ.க. தலைமையிலான கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ் பங்கேற்று, இரண்டு அமைச்சர்கள் பொறுப்பேற்றுள்ள புதிய சகாப்தத்தில் அவர் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார் என்று தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. கட்சியை மேலும் வலுப்படுத்தி, ராகுல்காந்தியின் கரங்களை வலுப்படுத்தும் நோக்கில், வரும் 2029 நாடாளுமன்றத் தேர்தலில் “நாற்பதும் நமதே” என்ற இலக்கோடு வெற்றிகாண மாவட்டத் தலைவர்கள் முழு ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதிமொழி எடுத்தனர்.

தீர்மானம் 2: முதலமைச்சர் விஜய் அரசுக்குக் பாராட்டு தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக கூட்டணி அரசு பொறுப்பேற்று இரண்டு மாதங்கள் நிறைவடைய உள்ள நிலையில், த.வெ.க அரசின் குறுகிய காலச் சாதனைகளை இக்கூட்டம் வெகுவாகப் பாராட்டியது. ஆட்சி அமைக்கப் போதிய இடங்கள் இல்லாதபோது, பாஜகவின் கட்டுப்பாட்டில் இருக்கும் அதிமுகவின் ஆதரவைப் பெறாமல், மதச்சார்பற்ற சக்திகளான காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவோடு விஜய் ஆட்சி அமைத்த கொள்கை உறுதியைத் தீர்மானம் போற்றியது.

முந்தைய திமுக அரசு ஏற்படுத்திய கடன் சுமை, மத்திய பாஜக அரசின் வஞ்சனை ஆகிய இரட்டைத் தாக்குதல்களை எதிர்கொண்டு, முதலமைச்சர் விஜய் 200 யூனிட் இலவச மின்சாரம், பயிர்க்கடன் தள்ளுபடி, குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு, எட்டாம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம், பெண்களுக்கான ‘சிங்கப் பெண்’ சிறப்பு அதிரடிப்படை மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு உள்ளிட்ட அதிரடித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். இந்தச் செயல்பாடுகள் மூலம் காமராஜர், எம்.ஜி.ஆர். போன்று தமிழ்நாடு அரசியலில் முதலமைச்சர் விஜய் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுப்பார் என்று வாழ்த்தி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

தீர்மானம் 3: மேகதாது அணை முயற்சிக்குக் கடும் எதிர்ப்பு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதற்குத் தமிழ்நாடு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த முயற்சி காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பு மற்றும் 2018 உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது மட்டுமல்லாமல், நீதிமன்ற அவமதிப்புச் செயலாகும் என்றும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

“தமிழகத்தின் அனுமதியில்லாமல் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட ஒரு செங்கல்லைக் கூட வைக்க அனுமதிக்க மாட்டோம்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் கூறியதை இக்கூட்டம் முழுமையாக வரவேற்றது. காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், தமிழகத்தின் நதிநீர் உரிமையையும் பாதுகாக்கும் வகையில், கர்நாடக அரசின் இந்த அணை கட்டும் முயற்சிகளை எதிர்த்துத் தமிழ்நாடு காங்கிரஸ் தொடர்ந்து வீரியமுடன் குரல் கொடுக்கும், போராட்டங்களை முன்னெடுக்கும் என்று தீர்மானம் வாயிலாக உறுதிபடத் தெரிவிக்கப்பட்டுள்ளது.