மாஸ்கோ: உக்ரைன் ராணுவத்தின் தொடர் தாக்குதல்கள் காரணமாக, உலக நாடுகளுக்கே கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருட்களை வாரி வழங்கும் வல்லமை படைத்த வல்லரசு நாடான ரஷ்யாவில் தற்போது வரலாறு காணாத வகையில் கடுமையான பெட்ரோல், டீசல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்தத் திடீர் எரிபொருள் தட்டுப்பாட்டைச் சமாளிப்பதற்காக, இந்தியா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளிடம் இருந்து பெட்ரோலை இறக்குமதி செய்ய அதிபர் விளாடிமிர் புதின் தலைமையிலான ரஷ்ய அரசு தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.

ரஷ்யாவை உலுக்கிய உக்ரைனின் குண்டுவீச்சு: ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாகப் போர் நீடித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, உக்ரைன் ராணுவம் சமீபத்தில் ரஷ்ய எல்லைக்குள் அதிரடியாகப் புகுந்து, அங்கு இயங்கி வந்த 50-க்கும் மேற்பட்ட பிரம்மாண்ட பெட்ரோல் மற்றும் டீசல் தயாரிக்கும் சுத்திகரிப்பு ஆலைகளைத் (Oil Refineries) தங்களது நவீன ஏவுகணைகள் மூலம் முற்றிலும் குண்டு வீசித் தகர்த்துள்ளது. ரஷ்யாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு எரிபொருள் உற்பத்தியில் பெரும் பங்கை ஆற்றி வந்த இந்த ஆலைகள் முடங்கியதால், ரஷ்யாவில் கடுமையான எரிபொருள் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

மொபைல் டாய்லெட் வைக்கும் அளவிற்கு நிலைமை மோசம்: தற்போது ரஷ்யாவில் உள்ள பெரும்பாலான எரிபொருள் நிலையங்களில் (Fuel Stations) பெட்ரோல், டீசல் வாங்குவதற்காகப் பொதுமக்கள் பல கிலோ மீட்டர் தூரத்திற்குத் தங்களது வாகனங்களுடன் நீண்ட வரிசைகளில் காத்துக்கிடக்கின்றனர். நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட நகரங்களில் பெட்ரோல் விநியோகத்திற்கு அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

எரிபொருள் நிலையங்களில் பல மணி நேரம் மக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளதால், அவர்களின் அவசரத் தேவைக்காக ஆங்காங்கே நடமாடும் கழிப்பறைகள் (Mobile Toilets) கூட அமைக்கப்பட்டுள்ளன. இந்த எதிர்பாராத மக்கள் கொந்தளிப்பையும் தட்டுப்பாட்டையும் சமாளிக்க முடியாமல் அதிபர் புதின் அரசு தற்போது திணறி வருகிறது.

இந்தியாவிடம் இருந்து பெட்ரோல் வாங்கத் திட்டம்: பொதுவாக ரஷ்யாவில் கோடை காலங்களில் விவசாயம் மற்றும் போக்குவரத்துத் தேவைகளுக்காக எரிபொருள் தேவை மிக அதிகமாக இருக்கும். தற்போதைய நிலவரப்படி, ரஷ்யாவிற்கு நாளொன்றுக்குச் சுமார் 1,10,000 டன் பெட்ரோல் தேவைப்படுகிறது. இந்த இக்கட்டான சூழலில், தங்களது உள்நாட்டுத் தேவையை உடனடியாகச் சரிகட்டுவதற்காகப் பெலாரஸ் உள்ளிட்ட தனது நட்பு நாடுகளிடம் இருந்தும், குறிப்பாக இந்தியாவில் இருந்தும் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலை இறக்குமதி செய்ய ரஷ்யா ஆலோசித்து வருகிறது.

ஏற்கனவே அண்டை நாடான பெலாரஸிடம் இருந்து ரஷ்யா குறிப்பிட்ட அளவு பெட்ரோலை இறக்குமதி செய்து வரும் நிலையில், இனி அதன் அளவை பல மடங்கு அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், மற்றொரு முக்கிய திருப்பமாக இந்தியாவிடம் இருந்தும் பெட்ரோல் வாங்குவதற்கான ஆரம்பகட்ட ஏற்பாடுகளை ரஷ்யா தொடங்கியுள்ளதாகத் சர்வதேச வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தலைகீழாக மாறிய வர்த்தகச் சூழல்: கடந்த சில ஆண்டுகளாக ரஷ்யாவிடம் இருந்துதான் இந்தியா மிக மலிவான விலையில் அதிக அளவில் கச்சா எண்ணெய்யை (Crude Oil) இறக்குமதி செய்து வருகிறது. குறிப்பாக, கடந்த ஜூன் மாதத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில், ரஷ்யாவின் பங்கு பாதிக்கும் மேலாக இருந்தது. ஜூன் மாதத்தில் மட்டும் ரஷ்யாவிடம் இருந்து நாளொன்றுக்குச் சுமார் 2.70 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய்யை இந்தியா பெற்றுள்ளது.

இப்படி இந்தியாவுக்குக் கச்சா எண்ணெய் வழங்கி வந்த ரஷ்யா, தற்போது தனது சுத்திகரிப்பு ஆலைகள் பாதிக்கப்பட்டதால், அதே இந்தியாவிடம் இருந்து சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலை விலைக்கு வாங்கத் திட்டமிட்டு வருவது உலக வர்த்தக அரங்கில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இந்த விவகாரம் குறித்து ரஷ்யாவின் எரிசக்தி அமைச்சகமோ அல்லது இந்தியாவின் பெட்ரோலிய அமைச்சகமோ இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.