திருவனந்தபுரம்: கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் மகள் டி.வீணாவுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியதில் மாநில அரசின் பங்கு ஏதுமில்லை என்றும், இதற்கு உயர் நீதிமன்றமே வழிவகுத்தது என்றும் கேரள முதல்வர் வி.டி. சதீசன் தெரிவித்துள்ளார்.

வீணாவின் ‘எக்ஸாலாஜிக்’ என்ற செயல்பாட்டில் இல்லாத ஐடி நிறுவனம் மற்றும் சுரங்க நிறுவனம் சிஎம்ஆர்எல் இடையே நடந்த நிதி பரிவர்த்தனைகள் தொடர்பாக சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில், வரும் வெள்ளிக்கிழமை கொச்சி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு வீணாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இவருடன் சிஎம்ஆர்எல் நிறுவனத் தலைவர் சசிதரன் கர்த்தா உட்பட எட்டு அதிகாரிகளுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சதீசன், “சிஎம்ஆர்எல் நிறுவனம் விசாரணையை நிறுத்தக் கோரி நீதிமன்றங்களை அணுகிய பின்னரே சட்ட நடைமுறைகள் தொடங்கின. அந்த மனுவும் மேல்முறையீடும் தள்ளுபடி செய்யப்பட்டதால், அமலாக்கத் துறை விசாரணை தொடர வழி ஏற்பட்டது. அதனால், இந்த விசாரணைக்கு உயர் நீதிமன்றமே வழி வகுத்தது. மாநில அரசு எதையும் தீர்மானிக்க முடியாது. சட்டம் தன் கடமையைச் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் முயற்சியில் யாரேனும் ஈடுபட்டால், அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்தார்.

மேலும், தொழிலதிபர் கவுதம் அதானியுடன் தொடர்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த சதீசன், “எனக்கும் கவுதம் அதானிக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவரது வணிக குழுமத்துடனும் எனக்கு எந்த தொடர்பும் இல்லை” எனத் தெளிவுபடுத்தினார்.

இந்தச் சூழ்நிலை, கேரள அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.