பெண்கள் மத்தியில் பெரிதும் பேசப்படாத, ஆனால் உடல் மற்றும் மன ரீதியாகப் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் ‘பெரிமெனோபாஸ்’ (Perimenopause) குறித்த விழிப்புணர்வை நடிகை திரிஷா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
திரிஷாவின் பகிர்வு இது குறித்துத் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ள திரிஷா, மருத்துவர் ஒருவர் தனக்கு விளக்கிய விளக்கத்தை முன்வைத்துள்ளார். “பெரிமெனோபாஸ் என்பது, மகிழ்ச்சி தரும் ஹார்மோன்கள் குறைந்து, கவலைகள் மற்றும் குழப்பங்கள் சார்ந்த ஹார்மோன்களின் ஆதிக்கம் பெருகும் ஒரு நிலை” என்று மருத்துவர் கூறியதை சுட்டிக்காட்டிய அவர், இதைவிடச் சிறப்பாக இந்த நிலையை விவரிக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
பெரிமெனோபாஸ் என்றால் என்ன? பெண்களின் மாதவிடாய் சுழற்சி நிரந்தரமாக நின்றுவிடும் ‘மெனோபாஸ்’ நிலையை நோக்கி உடல் நகரும் தொடக்கக் காலமே ‘பெரிமெனோபாஸ்’ ஆகும்.
-
கால அளவு: இது பொதுவாக 40-களின் தொடக்கத்தில் ஆரம்பித்து, ஒரு பெண்ணின் உடல்நிலையைப் பொறுத்து பல ஆண்டுகள் வரை நீடிக்கலாம்.
-
உடல் மற்றும் மன மாற்றங்கள்: ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அளவு குறைவதால் மாதவிடாய் சுழற்சியில் சீரற்ற தன்மை ஏற்படும். இதுதவிர திடீர் எரிச்சல், மனநிலை மாற்றம் (Mood swings), உடல் சோர்வு போன்றவை இதன் முக்கிய அறிகுறிகளாகக் கருதப்படுகிறது.
ஏன் இந்த விழிப்புணர்வு அவசியம்? முன்பெல்லாம் மெனோபாஸ் மற்றும் அதற்கு முந்தைய காலம் குறித்த விவாதங்கள் மிகவும் குறைவாகவே இருந்தன. ஆனால், தற்போதைய சூழலில் ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளைப் புரிந்துகொண்டு, முறையான மருத்துவ ஆலோசனை பெற வேண்டியதன் அவசியத்தை மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். திரிஷா போன்ற பிரபலங்கள் இது குறித்துத் திறந்த மனதுடன் பேசுவது, பெண்கள் தங்கள் உடல்நலனில் அதிக அக்கறை காட்ட ஊக்குவிப்பதாக உள்ளது.