சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மையைச் சீரமைக்கவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகம் மிகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக, மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் அவர்கள் தலைமையில், ரிப்பன் கட்டடத்தில் சிறப்பு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், பெருமளவு குப்பைகளை உருவாக்கும் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் பின்பற்ற வேண்டிய புதிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, ‘பெருமளவு கழிவு உற்பத்தியாளர்கள்’ (Bulk Waste Generators) என புதிய வரையறை உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, 20,000 சதுர மீட்டர் அல்லது அதற்கும் அதிகமான தளப்பரப்பு கொண்ட கட்டடங்கள், தினசரி 40,000 லிட்டருக்கும் மேல் தண்ணீர் பயன்படுத்தும் நிறுவனங்கள், அல்லது தினசரி 100 கிலோவிற்கும் அதிகமான திடக்கழிவுகளை உருவாக்கும் அமைப்புகள் அனைத்தும் இந்த பிரிவின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. குறிப்பாக, ஹோட்டல்கள், மருத்துவமனைகள், ஐடி பூங்காக்கள், திருமண மண்டபங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பெரிய குடியிருப்பு சங்கங்கள் இந்த விதிகளுக்குக் கட்டுப்பட வேண்டும்.
இந்த நிறுவனங்கள் அனைத்தும் வருகின்ற 15 நாட்களுக்குள், சென்னை மாநகராட்சி மற்றும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் இணையதளங்களில் கட்டாயமாகப் பதிவு செய்ய வேண்டும். முறையாகப் பதிவு செய்யத் தவறும் நிறுவனங்கள் மீது திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026-ன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையாளர் எச்சரித்துள்ளார். விதிமீறல்களில் ஈடுபடும் நிறுவனங்களுக்குக் குறைந்தபட்சம் ரூ. 5,000 முதல் அதிகபட்சமாக ரூ. 25,000 வரை அபராதம் விதிக்கப்படும். தொடர் விதிமீறல்கள் இருக்கும் பட்சத்தில், சட்டப்பூர்வமான பிற அமலாக்க நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் விதிகளைப் பின்பற்றாத 120 நிறுவனங்களுக்கு சுமார் ரூ. 5.95 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவுகளின்படி, திடக்கழிவுகளைக் கையாளும் முறையை ஒவ்வொரு நிறுவனமும் மாற்றிக்கொள்ள வேண்டும். அதாவது, குப்பைகளைத் தொடக்க நிலையிலேயே மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை எனத் தரம் பிரித்து, அதற்கென பிரத்யேக வண்ணக் குப்பைத் தொட்டிகளைப் பராமரிக்க வேண்டும். குறிப்பாக, மக்கும் கழிவுகளை அந்தந்த வளாகத்திலேயே உரமாக்குதல் அல்லது உயிரி எரிவாயு தயாரித்தல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த முறைகளின் மூலம் கையாள வேண்டும். உலர்கழிவு மற்றும் இதர சிறப்புப் பராமரிப்பு தேவைப்படும் கழிவுகளை, மாநகராட்சியால் அங்கீகரிக்கப்பட்ட முகமைகளிடம் ஒப்படைக்க வேண்டும்.
இந்த கழிவு உருவாக்கம் மற்றும் செயலாக்கம் குறித்த விவரங்களைச் சரியாகப் பராமரித்து, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். இந்த நடைமுறைகளைச் சரியாகச் செய்ய, அந்தந்த மண்டல அலுவலர்கள் மற்றும் தூய்மை இந்தியா இயக்கப் பணியாளர்கள் தேவையான உதவிகளை வழங்குவார்கள். சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்டுள்ள இந்த முயற்சியில் அனைத்து வணிக மற்றும் தொழில் நிறுவனங்களும் ஒத்துழைக்க வேண்டும் என்று ஆணையாளர் வலியுறுத்தியுள்ளார். இது குறித்த கூடுதல் விவரங்களை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.