வட அமெரிக்க தமிழ் சங்க பேரவை (பெட்னா) சார்பில் நியூ ஜெர்சியில் நடைபெற்ற தமிழ் விழாவில் ‘வி தி லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். உலகெங்கிலும் தமிழர்கள் அடைந்துள்ள உயரிய இடங்களைச் சுட்டிக்காட்டிய அவர், தமிழ் இனத்தின் அடையாளத்தை மத மற்றும் குறுகிய வட்டங்களுக்குள் அடைக்க வேண்டாம் என்று வலியுறுத்தினார்.
தமிழர் அடையாளத்தின் முக்கியத்துவம் அண்ணாமலை தனது உரையில், “மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் சாதாரண வியாபாரிகள் முதல் ஜனாதிபதி வரை தமிழர்கள் உயர்ந்த பொறுப்புகளில் இருப்பதைப் பார்க்கிறோம். தமிழ் இனத்தை மதம் சார்ந்த வட்டத்திற்குள் அடைக்காமல், தமிழர் என்ற மிகப்பெரிய வட்டத்திற்குள் அனைவரும் ஒன்றிணைந்து இருக்க வேண்டும். அதுவே நமக்கான உண்மையான அடையாளமாக இருக்க வேண்டும்,” என்று அன்பான வேண்டுகோளை விடுத்தார்.
புறநானூற்றின் வழிகாட்டுதல் கல்வி மற்றும் பண்பாட்டின் முக்கியத்துவத்தை 2,000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் உணர்ந்திருந்ததைச் சுட்டிக்காட்டிய அவர், புறநானூற்றின் 182-வது பாடலான ‘உண்டாலம்ம இவ்வுலகம்’ என்ற பாடலை இன்றைய தலைமுறையினர் அவசியம் படிக்க வேண்டும் என்றார்.
மேலும், ஒரு தமிழன் எப்படி இருக்க வேண்டும் என்பதை விளக்குகையில், “சினம்கொள்ளாதவர்களாக, அமிர்தமே கிடைத்தாலும் பகிர்ந்தளிப்பவர்களாக, தூங்காமல் அஞ்சாமல் உழைப்பவர்களாக இருக்க வேண்டும். உலகையே கூலியாகக் கொடுத்தாலும் சான்றோர் பழிக்கும் செயல்களைச் செய்யாத, தனது முயற்சியைப் பிறர் நலனுக்காக அர்ப்பணிக்கும் சான்றோர் வழிப்பட்ட இனமாகத் தமிழர்கள் திகழ வேண்டும்,” என்று அவர் அறிவுறுத்தினார்.
பண்டைய தமிழ் இலக்கியங்கள் கூறும் விழுமியங்கள், இன்றைய நவீன காலத்திற்கும் எவ்வளவு அவசியமானது என்பதை அவரது பேச்சு வெளிப்படுத்தியது.