தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்தும், போதைப்பொருள் புழக்கம் குறித்தும் கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரிடம் புகார் அளித்த சில மணி நேரங்களிலேயே, மாநிலத்தின் தற்போதைய அவல நிலையை உணர்த்தும் வகையில் ஒரு கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆற்காடு கொடூர சம்பவம் ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே 60 வயது மூதாட்டி ஒருவரை, 23 வயது வாலிபர் கஞ்சா போதையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்தச் செய்தி ஒட்டுமொத்த தமிழகத்தையும் பெரும் அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது. முன்னதாக, இன்று காலைதான் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்கேடு தொடர்பாக கவர்னரிடம் பாஜக சார்பில் மனு அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நிகழ்ந்துள்ள இந்தச் சம்பவம் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கத் த.வெ.க. அரசு தவறிவிட்டதையே காட்டுகிறது என்று அவர் விமர்சித்துள்ளார்.

கஞ்சா புழக்கத்தின் தாக்கம் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான ஆட்சியில், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் புழக்கம் எந்தவிதக் கட்டுப்பாடும் இன்றி பெருகியுள்ளது என்பதற்கு இச்சம்பவம் மிகச்சிறந்த சாட்சியாகும் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். தற்போதைய த.வெ.க. அரசு போதைப்பொருள் விற்பனையையும், சமூக விரோதச் செயல்களையும் தடுக்கத் தவறிவிட்டது. இதனால், குற்றவாளிகளுக்குச் சட்டத்தின் மீதான பயமே அற்றுப்போயுள்ளது.

இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கக் கோரிக்கை இந்தக் கொடூர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு விரைந்து நீதி கிடைக்க வேண்டும் என்றும், குற்றவாளிக்குச் சட்டப்படி கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், தமிழகத்தை அச்சுறுத்தி வரும் போதைப்பொருள் கலாச்சாரத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவும், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை உறுதிப்படுத்தவும் த.வெ.க. அரசு உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் காட்டமாகத் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.