Home » “நைஜீரியாவில் கடத்தப்பட்ட பள்ளிக் குழந்தைகள் விடுவிக்கப்பட வேண்டும் – போப் லியோ வேண்டுகோள்”

“நைஜீரியாவில் கடத்தப்பட்ட பள்ளிக் குழந்தைகள் விடுவிக்கப்பட வேண்டும் – போப் லியோ வேண்டுகோள்”

கடத்தப்பட்டவர்களை மீட்பதற்கு அதிகாரிகள் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என போப் லியோ கேட்டுக்கொண்டுள்ளார்.

அபுஜா:

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் நைஜர் மாகாணத்தில் இயங்கும் கத்தோலிக்க பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளிக்குள் ஆயுதம் தாங்கிய கும்பல் திடீரென நுழைந்து, துப்பாக்கி முனையில் 100-க்கும் மேற்பட்டவர்களை கடத்திச் சென்றதாக முதலில் தகவல் வெளியாகியது. பின்னர் நடைபெற்ற விசாரணையில், 303 குழந்தைகளும் 12 ஆசிரியர்களும் கடத்தப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

முன்னதாக, கடந்த 18-ந்தேதி எர்கு நகரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் பிரார்த்தனையில் இருந்த 40 பேர் ஆயுதக்குழுவினரால் கடத்தப்பட்டனர். இதில் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டு, 38 பேர் பின்னர் விடுவிக்கப்பட்டனர். நேற்று நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் ஆயுதக்குழுவினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 5 பாதுகாப்புப் படையினர் உயிரிழந்தனர்.

பள்ளி குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் கடத்தப்பட்ட சம்பவத்திற்கு இதுவரை எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை. அவர்களை மீட்பதற்காக பாதுகாப்புப் படையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், கடத்தப்பட்டவர்களில் சுமார் 50 குழந்தைகள் தப்பித்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், நைஜீரியாவில் கடத்தப்பட்ட பள்ளிக் குழந்தைகள் விடுவிக்கப்பட வேண்டும் என போப் லியோ தன் வேண்டுகோளை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது:

“கடத்தப்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் அனுபவிக்கும் துயரத்தை நான் ஆழமாக உணர்கிறேன். பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று மனமார வேண்டுகிறேன். மேலும், அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் துரிதமாக முன்னெடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.”

இவ்வாறு போப் லியோ தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *