உலக மீன்வள தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் சார்பாக நாகப்பட்டினம் மாவட்டம், விழுந்தமாவடி கிராமத்தில் 21.11.2025 அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியினை தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர்.நா.பெலிக்ஸ் அவர்கள் தொடங்கி வைத்து, மீன்வளர்ப்பு விவசாயிகளிடம் சிறப்புரை ஆற்றினார். துணைவேந்தர் அவர்கள் தனது உரையில், நன்னீர் மீன்வளர்ப்பில் எளிய முறையில் அதிக இலாபம் ஈட்டக்கூடிய நவீன தொழில்நுட்பங்கள் குறித்து விரிவாக விளக்கினார். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, இந்திய பெருங்கெண்டைகளான கட்லா, ரோகு, மிர்கால் ஆகிய இனங்களின் மீன்குஞ்சுகள் பண்ணை குட்டைகளில் இருப்பு செய்யப்பட்டது. மொத்தம் 1000 எண்ணிக்கையிலான இந்த மீன்குஞ் சுகள் இருப்பு செய்யப்பட்டு, உள்ளூர் மீன் வளர்ப்பு விவசாயிகளுக்குள் ஆர்வத்தை ஏற்படுத்தியது. நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக, தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் மூலமாக 7 மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்ட தாக்க ஆய்வு திட்டத்தின் ஒரு பகுதியாக, விழுந்தமாவடி கிராம பண்ணை குட்டைகளில் இருப்பு செய்யப்பட்ட கிப்ட் திலேப்பியா மற்றும் கொடுவா மீன்கள் அன்று அறுவடை செய்யப்பட்டன. கிப்ட் திலேப்பியா(900 கிராம்) மற்றும் கொடுவா(750 கிராம்) எடையில் வளர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. துணைவேந்தர் முனைவர்.ந.பெலிக்ஸ் அவர்களின் முன்னிலையில் அறுவடை செய்யப்பட்ட இந்த மீன்கள் கிராமவாசிகள் மற்றும் மீன் வியாபாரிகளிடம் விற்பனைக்கு தொடங்கி வைக்கப்பட்டன. சுமார் 50க்கும் மேற்பட்ட பண்ணையாளர்கள் கலந்து கொண்டு பயனடைந்த விழாவின் வரவேற்புரையை விரிவாக்கக் கல்வி இயக்குனர் முனைவர்.அ.கோபாலக்கண்ணன் அவர்கள் வழங்கினார். இந்த நிகழ்ச்சி, வேளாண் அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர்.வ.செந்தில்குமார் அவர்களின் நன்றியுரையுடன் நிறைவடைந்தது

