தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, கூட்டணி அமைப்பு மற்றும் தொகுதி பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்து வருகின்றன. 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் இருந்த பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அப்போது எல்.முருகன், எச்.ராஜா, அண்ணாமலை, குஷ்பு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் போட்டியிட்டிருந்தாலும், நான்கு பேர் — காந்தி (நாகர்கோவில்), நயினார் நாகேந்திரன் (நெல்லை), வானதி சீனிவாசன் (கோவை தெற்கு), சரஸ்வதி (மொடக்குறிச்சி) — மட்டுமே வெற்றி பெற்றனர்.
இந்த முறை நடைபெற உள்ள சட்டசபை தேர்தலிலும் பாஜக மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. ஆனால், கடந்த முறை பெற்றதை விட அதிகமான தொகுதிகளை கோருவதற்கான திட்டத்தை பாஜக வகுத்துள்ளது. குறிப்பாக, 53 தொகுதிகளை அதிமுகவிடம் கேட்டுப்பெற பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2024ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அதிக ஓட்டுகள் பெற்ற சட்டசபை பகுதிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
வரும் 15ஆம் தேதி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தமிழகம் வர உள்ள நிலையில், அவரின் மூலம் இந்த தொகுதி பட்டியலை அதிமுக தலைமையிடம் வழங்க பாஜக திட்டமிட்டுள்ளது. பாஜக பட்டியலிட்டுள்ள 53 தொகுதிகளில் சென்னையில் மட்டும் 8 இடங்கள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக கோரியதாக கூறப்படும் தொகுதிகள்: சோளிங்கர், எழும்பூர், துறைமுகம், ஆயிரம் விளக்கு, கொளத்தூர், மயிலாப்பூர், தியாகராயநகர், வேளச்சேரி, விருகம்பாக்கம், கோவை வடக்கு, கோவை தெற்கு, கவுண்டம்பாளையம், பல்லடம், சிங்காநல்லூர், சூலூர், பாலக்கோடு, ஒட்டன்சத்திரம், பவானி, சங்கராபுரம், குளச்சல், கன்னியாகுமரி, கிள்ளியூர், நாகர்கோவில், பத்மநாபபுரம், விளவங்கோடு, குளித்தலை, ஓசூர், தளி, மதுரை தெற்கு, ராசிபுரம், குன்னூர், மேட்டுப்பாளையம், ஊட்டி, பெரம்பலூர், கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர், வால்பாறை, பரமக்குடி, தென்காசி, போடி, ஒட்டப்பிடாரம், ஸ்ரீரங்கம், ஆலங்குளம், அம்பாசமுத்திரம், நாங்குநேரி, பாளையங்கோட்டை, ராதாபுரம், ஆம்பூர், அணைக்கட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம், வேலூர், அருப்புக்கோட்டை.
மேலும், இந்த 53 தொகுதிகளுக்கு அப்பால், கூடுதலாக 17 தொகுதிகளை அதிமுகவிடம் பெற்று, தங்களுடன் இணையும் சிறு கூட்டணி கட்சிகளுக்கு பகிர்ந்து கொடுக்கவும் பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாஜக முன்வைத்துள்ள இந்த விரிவான தொகுதி கோரிக்கை பட்டியலை பார்த்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.