டி20 தொடரில் இந்தியா 2–1 முன்னிலை – சூர்யகுமார், சுப்மன் மீது அபிஷேக் சர்மா வைத்துள்ள நம்பிக்கை

தர்மசாலா: இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையே நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், இந்திய அணி 2–1 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடி முடித்துள்ளது. நான்காவது டி20 போட்டி வரும் 17ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் துணை கேப்டன் சுப்மன் கில் இருவரும் எதிர்பார்த்த அளவில் ரன் குவிக்க முடியாமல் போராடி வருகின்றனர். குறிப்பாக, சூர்யகுமார் கடந்த 20 இன்னிங்ஸ்களில் ஒரு அரைசதமும் பதிவு செய்யாதது ரசிகர்களிடையே கவலைக்குரிய விஷயமாகியுள்ளது. அதேபோல், சுப்மன் கில்லும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து பெரிய இன்னிங்ஸ் ஆட முடியாமல் திணறி வருகிறார். இதனால் இருவரும் சமூக வலைதளங்களிலும், கிரிக்கெட் வட்டாரங்களிலும் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய அணியின் இளம் வீரரான அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ் மற்றும் சுப்மன் கில் இருவரும் விரைவில் தங்கள் பழைய ஃபார்முக்கு திரும்புவார்கள் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, வரவிருக்கும் டி20 உலகக்கோப்பையில் இந்த இரு வீரர்களும் இந்திய அணிக்காக முக்கிய வெற்றிகளைப் பெற்றுத்தருவார்கள் என அவர் உறுதியாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அபிஷேக் சர்மா கூறியதாவது: “ஒரு விஷயத்தை நான் நேரடியாகச் சொல்கிறேன். நம்புங்கள், இந்த இரண்டு வீரர்களும்—சூர்யகுமார் யாதவ் மற்றும் சுப்மன் கில்—டி20 உலகக்கோப்பையில் மட்டுமல்ல, அதற்கு முன் நடைபெறும் தொடர்களிலும் இந்திய அணிக்காக போட்டிகளை வெற்றி பெற செய்வார்கள். நான் அவர்களுடன் நீண்ட காலம் விளையாடியிருக்கிறேன். குறிப்பாக சுப்மனுடன் பல ஆண்டுகளாக இணைந்து விளையாடி வருகிறேன். அவர் எந்த சூழ்நிலையிலும், எந்த அணிக்கு எதிராகவும் எப்படி அசத்துவார் என்பதை நான் நன்றாக அறிவேன்.”

அவர் மேலும் கூறினார்: “சுப்மன் கில்லின் திறமை மீது எனக்கு ஆரம்பத்திலிருந்தே நம்பிக்கை உள்ளது. அதை அனைவரும் மிக விரைவில் காண்பார்கள். அவர்மீது ரசிகர்களும் நம்பிக்கை வைப்பார்கள் என நான் எதிர்பார்க்கிறேன்.”

அபிஷேக் சர்மாவின் இந்த கருத்துகள், தற்போது ஃபார்மில் இல்லாத சூர்யகுமார் மற்றும் சுப்மன் கில் இருவருக்கும் ஒரு பெரிய ஆதரவாக பார்க்கப்படுகிறது.