சென்னை – ‘ஜனநாயகன்’ vs ‘பராசக்தி’: ரிலீஸ் தேதியைச் சுற்றி ரசிகர்கள் மோதல்
சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி திரைப்படம் ஜனவரி 9ஆம் தேதி வெளியாகும் என்ற தகவல் பரவியுள்ளதால், நடிகர் விஜய்யின் ரசிகர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். “விஜய்யின் கடைசி படத்திற்கு மரியாதை கொடுக்க வேண்டாமா? துப்பாக்கியை கையில் கொடுத்தவருக்கு மரியாதை அளிக்க வேண்டாமா?” என சோசியல் மீடியாவில் ஆவேசமாக கருத்துகள் பதிவாகி வருகின்றன.
நடிகர் விஜய் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். 2026 சட்டசபைத் தேர்தலை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வரும் அவர், தனது கடைசி படமாக ஜனநாயகன் திரைப்படத்தை அறிவித்தார். அ.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, மமீதா பைஜு, பிரியாமணி, பிரகாஷ் ராஜ், பாபி டியோல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மலேசியாவில் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.
முதலில் பராசக்தி திரைப்படம் ஜனவரி 14ஆம் தேதி வெளியிடப்படும் என கூறப்பட்ட நிலையில், தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தற்போது ஜனவரி 9ஆம் தேதியே ரிலீஸ் செய்ய முடிவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பொங்கல் விடுமுறை காலத்தில் அதிகமானோர் திரையரங்குகளுக்கு வருவார்கள் என்பதால், முன்னதாகவே படத்தை வெளியிட முயற்சிகள் தொடங்கியுள்ளன. சுதா கொங்கரா இயக்கியுள்ள இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாகக் கொண்ட கதை, திமுகவின் இந்தி எதிர்ப்பு பிரச்சாரத்துக்கு வலு சேர்க்கும் என கருதப்படுகிறது.
இந்த சூழலில், விஜய்யின் கடைசி படம் தனியாக வெளியாக வேண்டும் என்று அவரது ரசிகர்கள் வலியுறுத்துகின்றனர். “30 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவுக்கு பங்களித்த விஜய்யின் கடைசி படத்திற்கு மரியாதை அளிக்க, சிவகார்த்திகேயன் போட்டியில் இருந்து விலக வேண்டும்” என தவெகவினர் பதிவிட்டு வருகின்றனர். மேலும், “சிவகார்த்திகேயனின் வளர்ச்சிக்கு விஜய் உறுதுணையாக இருந்தார்” எனவும் ரசிகர்கள் வலியுறுத்துகின்றனர்.
ஆனால், சிவகார்த்திகேயன் ரசிகர்கள், “சினிமா ஒரு தொழில். ஒரே படம் மட்டும் ரிலீஸாக வேண்டும் என்று கூறுவது நியாயமல்ல” என எதிர்வினை தெரிவிக்கின்றனர்.
இதே நேரத்தில், பராசக்தி படத்தை வைத்து திமுக அரசியல் செய்கிறது என தவெகவினர் குற்றம் சாட்டுகின்றனர். உதயநிதி ஸ்டாலின் வழங்கும் இந்தப் படம், ஜனநாயகன் படத்துக்கு நிகராக திரையரங்குகளில் வெளியாகும் என அவர்கள் கூறுகின்றனர்.
தவெக கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ், “விஜய் முன்னாள் நடிகர்” என பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் தவெக தொண்டர்கள் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தாமல், ஜனநாயகன் படத்தின் ரிலீஸைச் சுற்றி சோசியல் மீடியாவில் கொந்தளிப்பது தற்போது பேசுபொருளாகியுள்ளது.