சென்னை:

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் தனித்துவமான இடத்தை பிடித்தவர் நடிகை சாரா அர்ஜுன். குறிப்பாக இயக்குநர் ஏ. எல். விஜய் இயக்கத்தில் வெளியான ‘தெய்வத்திருமகள்’ திரைப்படத்தில் ‘நிலா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்த அவர், தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார்.

இந்த படத்தில் நடிகர் விக்ரம் மற்றும் சாரா அர்ஜுன் இடையே இடம்பெற்ற உணர்ச்சிகரமான காட்சிகள் ரசிகர்களை கண்கலங்க வைத்தன. குறிப்பாக படத்தின் இறுதியில் வரும் பாசப்போராட்டக் காட்சி திரைப்பட ரசிகர்களின் மனதில் நீங்கா நினைவாக உள்ளது. அந்த காட்சியின் மூலம் சாரா அர்ஜுன் குழந்தை நட்சத்திரமாக மிகுந்த பாராட்டைப் பெற்றார்.

‘தெய்வத்திருமகள்’ படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் ஏ. எல். விஜய் இயக்கிய ‘சைவம்’ திரைப்படத்திலும் சாரா அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அந்த படத்திலும் தனது இயல்பான நடிப்பின் மூலம் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்த அவர் பின்னர் சில காலம் திரையுலகில் இருந்து இடைவெளி எடுத்தார்.

அதற்குப் பிறகு பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இப்போது வளர்ந்த நடிகையாக புதிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் சாரா அர்ஜுன், சமீபத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக ‘துரந்தர்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் வெளியானதும் பெரிய வரவேற்பைப் பெற்று, உலகளவில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்ததாக கூறப்படுகிறது. இதன் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சாரா அர்ஜுன் தற்போது முன்னணி நடிகையாக உருவெடுத்து வருகிறார்.

இந்த நிலையில், சாரா அர்ஜுனின் வளர்ச்சி குறித்து ‘தெய்வத்திருமகள்’ திரைப்பட இயக்குநர் ஏ. எல். விஜய் உருக்கமாக பேசியுள்ளார். அவர் கூறியதாவது: “சாரா அர்ஜுன் எனக்கு ஒரு நடிகை மட்டுமல்ல, என் மகள் போலவே இருக்கிறார். அவர் சிறு வயதில் இருந்து எனக்கு மிகவும் நெருக்கமானவர். பள்ளி தேர்வுகள் முடிந்து விடுமுறை கிடைக்கும் போது அவர் என் வீட்டிற்கு வந்து நேரம் செலவிடுவார்” என்று கூறினார்.

மேலும் அவர் கூறும்போது, “இப்போது அவர் பெரிய நடிகையாக வளர்ந்திருப்பது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. அவர் என்னை ‘மாமா’ என்று அழைத்தாலும், நான் அவரை என் மகளாகவே நினைக்கிறேன். அவர் அடைந்துள்ள இந்த உயரம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது” என்று உருக்கமாக தெரிவித்தார்.

சாரா அர்ஜுனின் வளர்ச்சி குறித்து இயக்குநர் ஏ. எல். விஜய் தெரிவித்த இந்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. ரசிகர்களும் சாரா அர்ஜுனின் பயணத்தை பாராட்டி வருகின்றனர்.