கோவை:
தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் எந்தவிதமான பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் இன்று சென்னை வந்தார். தியாகராயகரில் உள்ள பாஜக மாநில தலைமையகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் சட்டமன்ற தேர்தல் தயாரிப்புகள், கள நிலவரம், வெற்றி வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் பியூஸ் கோயல் சுமார் ஒன்றரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால், கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.

இந்த நிலையில், கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், இந்த பேச்சுவார்த்தைகள் குறித்து விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில், “இன்றைய பேச்சுவார்த்தையில் சட்டமன்ற தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் எவ்வளவு வாக்குகளை பெற்றுள்ளன, வாக்கு சதவீதம் என்ன என்பது போன்ற விஷயங்கள் குறித்து மட்டுமே பேசினோம். தொகுதி பங்கீடு குறித்து எடப்பாடி பழனிசாமியுடன் எந்தவிதமான விவாதமும் நடைபெறவில்லை,” என்று தெளிவுபடுத்தினார்.

மேலும், “அதிமுகவுடனான பேச்சுவார்த்தையில் ஓ.பன்னீர்செல்வம் அல்லது டிடிவி தினகரன் குறித்து எதுவும் பேசப்படவில்லை. அதேபோல், நடிகர் விஜய் தொடர்பாகவும் எந்த உரையாடலும் இடம்பெறவில்லை. தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ளன. அந்த நேரத்தில் யார் யார் எந்த பக்கம் இருப்பார்கள் என்பது தெரியவரும்,” என்றும் அவர் கூறினார்.

பியூஸ் கோயலுடன் நடந்த சந்திப்பு குறித்து பேசிய நயினார் நாகேந்திரன், “அவருடன் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து விவாதித்தோம். அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை. திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றுவதே எங்களின் முக்கிய நோக்கம். ஒத்த கருத்துடைய அனைத்து அரசியல் கட்சிகளும் எங்கள் கூட்டணிக்கு வர வேண்டும்,” என்று தெரிவித்தார்.

மேலும், “தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதுபோல், சரியான நேரத்தில் சரியான முடிவுகள் எடுக்கப்படும். ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் மக்கள் நலனுக்காக செயல்படும் புதிய விடியலான அரசு உருவாகும்,” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த மாதத்தில் ரூ.1 லட்சத்தை கடந்துள்ளதுடன், இதுவரை இல்லாத வரலாற்றுச் சாதனை உச்சத்தை எட்டியுள்ளது. ஒருகாலத்தில் “வரலாறு காணாத புதிய உச்சம்” என்ற சொற்றொடர் அரிதாக பயன்படுத்தப்பட்ட நிலையில், தற்போது அது தினசரி செய்தியாக மாறியுள்ளது. இதனால் தங்கம் பலருக்கும் எட்டாக்கனியாக மாறி வருகிறது.

இந்திய குடும்பங்களில் தங்கத்திற்கு எப்போதுமே தனிச்சிறப்பு உண்டு. தலைமுறையாண்டு தலைமுறையாக தங்க நகைகளை பாதுகாத்து வருவது இந்திய மரபாக உள்ளது. ஒரு காலத்தில் ஆபரணமாக மட்டுமே பார்க்கப்பட்ட தங்கம், காலப்போக்கில் முக்கிய முதலீட்டு சொத்தாகவும் மாறியது. திருமணம், பண்டிகை, அவசர கால தேவைகள் என அனைத்திலும் தங்கம் முக்கிய பங்காற்றி வருகிறது. ஆனால் தற்போது தங்கத்தின் விலை பொதுமக்களை, குறிப்பாக இல்லத்தரசிகள் மற்றும் நடுத்தர குடும்பங்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இன்றைய நிலவரப்படி, ஆபரணத் தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.1,02,160-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.12,770-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ரூ.1,360 உயர்ந்திருந்த தங்கம் விலை, இன்று மேலும் ரூ.1,600 உயர்ந்து புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது. கடந்த 15-ம் தேதிக்கு பிறகு தங்கம் ரூ.1 லட்சத்தை தாண்டி, ஏற்றத் தாழ்வுகளுடன் நகர்ந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிரடி உயர்வை கண்டுள்ளது.

ஒரு வருட காலத்தில் தங்கம் விலை காட்டிய உயர்வே அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு சவரன் தங்கம் ரூ.57,200 ஆக இருந்தது. அதன் பின்னர் படிப்படியாக உயர்ந்து, சில நேரங்களில் திடீர் சரிவையும் சந்தித்தது. கடந்த நவம்பர் மாதத்தில் ரூ.88,000 வரை குறைந்த தங்கம், அதன் பின்னர் தொடர்ந்து உயர்ந்து இம்மாதத்தில் ரூ.1 லட்சத்தை கடந்துள்ளது. 2024-ம் ஆண்டு முழுவதும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.12,000 மட்டுமே உயர்ந்த நிலையில், நடப்பு ஆண்டில் மட்டும் ரூ.45,000 வரை உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விலை உயர்வுக்கு சர்வதேச பொருளாதார நிலவரங்கள், போர் பதற்றங்கள், அமெரிக்க டாலரின் மதிப்பு, பணவீக்கம் மற்றும் மத்திய வங்கிகளின் அதிகரித்த தங்க கொள்முதல் ஆகியவை முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன. பாதுகாப்பான முதலீடு என்ற நம்பிக்கையால் உலக நாடுகள் தங்கத்தில் அதிக முதலீடு செய்யும் நிலையில், தங்கத்தின் விலை குறுகிய காலத்தில் கணிசமாக குறையும் வாய்ப்பு குறைவு என சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால், ஒரு பவுன் தங்கம் வாங்குவது இன்று ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு கனவாகவே மாறியுள்ளது. விலைவாசி உயர்வும், ஊதிய வளர்ச்சி குறைவும் சேர்ந்து, தங்கத்தை சாதாரண மக்களின் எட்டாக்கனியாக மாற்றியுள்ளது என்பதே நிதர்சன உண்மையாக உள்ளது.