சிவகங்கை:
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூரில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவிலுக்கு வருகை தந்து வழிபாடு செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பல அரசியல் மற்றும் சமூக விவகாரங்கள் குறித்து முக்கியமான கருத்துகளை வெளியிட்டார்.

முதலில், நடிகர் கமல்ஹாசன் குறித்து பேசும் போது அண்ணாமலை கூறினார்: “கமல்ஹாசன் சிறந்த நடிகர்; அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அவர் தனது பணியில் முழுமையாக உழைக்கும் ஒருவர். சமீபத்தில் மத்திய நிதி மந்திரி மற்றும் இன்னொருவர் பேசிய கருத்தை, கமல்ஹாசன் தவறாக புரிந்து கொண்டுள்ளார். அவர் மாநிலங்களவை உறுப்பினராக இருப்பதால், அவர்மீது குற்றம் சுமத்த விரும்பவில்லை. அடுத்த முறை அவர் பேசும் பொழுது, தன்னுடைய தவறை திருத்திக் கொள்வார் என நம்புகிறேன்,” என்றார்.
அடுத்து, நடிகர் விஜய் மற்றும் த.வெ.க. கட்சி குறித்து அவர் கூறினார்: “விஜய் அவரின் கட்சி, அவரின் கொள்கைகளை மக்களின் முன்னால் வைக்கட்டும். அதேபோல், நாங்களும் தேசிய ஜனநாயக கூட்டணியின் கொள்கைகளை மக்களிடம் வைக்கிறோம். இறுதியில் மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அரசியலில் ஒரு நாகரீகம் இருக்க வேண்டும். அதில் ‘லட்சுமண ரேகை’ என்ற எல்லை உள்ளது. அதைக் கடக்கக் கூடாது என்பதையே விஜய்க்கு நான் கூறினேன்,” என்று விளக்கம் அளித்தார்.
ஓ. பன்னீர்செல்வம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அண்ணாமலை, “ஓ.பன்னீர்செல்வம் தனியாகப் பிரிந்து செல்வது போன்றது எதுவும் இல்லை. அவர் இன்னும் எங்களோடுதான் இருக்கிறார். தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளன. அதுவரை பல அரசியல் ஆலோசனைகளும், தீர்மானங்களும் எடுக்கப்படும்,” என்று தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, மாநில அரசை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை, “திமுக ஆட்சியில் கல்வி துறையின் நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது. இன்று கல்விக் கூடங்களுக்குள்ளே கஞ்சா விற்கும் அளவுக்கு அரசின் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. இத்தகைய சூழலில் தமிழ்நாடு கல்வியில் முன்னேற்றமடைந்த மாநிலம் என்று எப்படி கூற முடியும்? தேசிய புள்ளி விவரங்களின் படி, தமிழ்நாடு கல்வித் தரத்தில் கடைசி இடத்தில் உள்ளது. இது திமுக அரசின் தோல்வி,” என்று கடும் விமர்சனம் செய்தார்.
பின்னர், செய்தியாளர்கள் “நீங்கள் பாஜகவிலிருந்து விலகி, தனி கட்சி ஆரம்பிக்கப் போகிறீர்கள் என்று செய்திகள் வெளியாகின்றன; அதில் உண்மையா?” எனக் கேட்டனர். அதற்கு அண்ணாமலை சிரித்தபடி, “என்னைப் பார்த்தால் அப்படி தெரிகிறதா?” என்று பதில் கேள்வி எழுப்பி மறுத்தார்.
அவரின் இந்த பதில், பாஜக உள்ளகத்தில் பிரிவு அல்லது புதிய கட்சி அமைப்பு குறித்து பரவிவரும் வதந்திகளை தணித்துள்ளது.
திருக்கோஷ்டியூரில் பக்தர்களுடன் கலந்துகொண்டு வழிபாடு செய்த அண்ணாமலை, பின்னர் ஊராட்சி மக்களுடன் உரையாடியும், கட்சி தொண்டர்களை சந்தித்தும் நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.