திஸ்பூர்,
அசாம் மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் தீவிரமடைந்து வருகிறது. மொத்தம் 126 தொகுதிகளை கொண்ட அசாம் சட்டமன்றத்திற்கான வாக்குப்பதிவு வருகிற 9ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு, அதே நாளில் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்த தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று அசாம் மாநிலத்தின் தேமாஜி மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அவர் பேசுகையில், சட்டவிரோத குடியேற்றம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார். “சட்டவிரோதமாக குடியேறிவர்களை பாதுகாக்க புதிய சட்டத்தை கொண்டு வருவோம் என்று காங்கிரஸ் தலைவர்கள் வெளிப்படையாக கூறி வருகின்றனர். இது மாநிலத்தின் சமூக அமைப்பை பாதிக்கும்” என்று தெரிவித்தார்.
மேலும், “பெரும்பான்மை சமூகத்தை சிறுபான்மையினராக மாற்றி, சட்டவிரோத குடியேற்றங்களை ஆதரித்து நிரந்தர வாக்கு வங்கியை உருவாக்க காங்கிரஸ் முயற்சி செய்கிறது” என்றும் குற்றம்சாட்டினார். 2014க்கு முன்பு காங்கிரஸ் இதற்கான சட்டத்தை கொண்டு வர முயன்றபோது, தேசிய ஜனநாயக கூட்டணி அதனை எதிர்த்ததாகவும் அவர் கூறினார்.
அசாம் மாநிலத்தின் வளர்ச்சி குறித்து பேசுகையில், “காங்கிரஸ் கட்சி மக்களின் நலனை விட குடும்ப நலனையே முன்னிலைப்படுத்தியது. மாநிலத்தின் வளங்களை பாதுகாக்க தவறியது” என்று தெரிவித்தார். அதே சமயம், பா.ஜ.க. அரசு மாநிலத்தின் வளங்களை பாதுகாத்து வளர்ச்சிக்காக பயன்படுத்தி வருவதாகவும் கூறினார்.
வன வளங்கள் மற்றும் விலங்குகள் பாதுகாப்பு தொடர்பாக அவர் கூறுகையில், “காங்கிரஸ் ஆட்சியில் வன நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டதால் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் அழியும் நிலைக்கு சென்றது. ஆனால் பா.ஜ.க. அரசு கடுமையான நடவடிக்கைகள் மூலம் அந்த நிலையை மாற்றியுள்ளது” என்று தெரிவித்தார்.
மேலும், அசாமின் முக்கியமான தேயிலைத் தொழிலைப் பற்றியும் அவர் பேசினார். “200 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேயிலைத் துறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு காங்கிரஸ் ஆட்சியில் உரிய உரிமைகள் வழங்கப்படவில்லை. ஆனால் பா.ஜ.க. அரசு அந்த தவறுகளை சரிசெய்ய முயற்சி செய்து வருகிறது” என்று கூறினார்.
மொத்தத்தில், காங்கிரஸ் ஆட்சியை விமர்சித்து, பா.ஜ.க. அரசின் சாதனைகளை முன்னிறுத்திய பிரதமர் மோடியின் இந்த பேச்சு அசாம் தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.