இஸ்லாமாபாத்:
Pakistan மற்றும் Afghanistan இடையிலான எல்லைப் பதற்றம் கடும் மோதலாக மாறியுள்ளது. தலீபான் கிளை அமைப்புகளின் தாக்குதல்களுக்கு பதிலடி என பாகிஸ்தான் வான்வழி மற்றும் தரை தாக்குதல்களை தீவிரப்படுத்திய நிலையில், இரு நாடுகளும் வெளிப்படையான போர்நிலைக்கு நகர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அரசு குற்றம்சாட்டுவதாவது: தலீபானின் கிளை அமைப்பான தெஹ்ரிக்-இ-தலிபான் (TTP) அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள், பாகிஸ்தானில் உள்ள விமான நிலையங்கள், மசூதிகள், ராணுவத் தளங்கள் மற்றும் காவல் நிலையங்களை குறிவைத்து தொடர் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி இஸ்லாமாபாத் நகரில் உள்ள ஷியா மசூதியில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 36 பேர் உயிரிழந்தனர். மேலும், கைபர் பக்துங்க்வா மாகாணத்தில் சோதனைச் சாவடி அருகே நடைபெற்ற குண்டுவெடிப்பில் 11 ராணுவ வீரர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதிகளில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கூறப்படும் முகாம்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழந்ததாக தலீபான் அரசு தெரிவித்தது. இதற்கு தக்க பதிலடி கொடுப்போம் எனவும் அவர்கள் எச்சரித்தனர்.
நேற்று இரவு எல்லைப் பகுதியில் மீண்டும் திடீர் மோதல் வெடித்தது. தலீபான்கள் தாக்குதல் நடத்தியதாக கூறிய பாகிஸ்தான், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வான்வழி தாக்குதல் மேற்கொண்டது. இதனால் எல்லைப்பகுதியில் கடும் துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிப்புகள் இடம்பெற்றன.
தலீபான் தரப்பு தகவலின்படி, இந்த மோதலில் 55 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகவும், இரண்டு ராணுவத் தளங்கள் மற்றும் 19 சோதனைச் சாவடிகள் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. அதேவேளை, தலீபான் படையைச் சேர்ந்த 8 பேர் கொல்லப்பட்டு 11 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
மாறாக, பாகிஸ்தான் மந்திரி அத்தாவுல்லா தரார் கூறுகையில், பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதல்களில் சுமார் 130 தலீபான்கள் கொல்லப்பட்டதாகவும், 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் தரப்பில் 2 ராணுவ வீரர்கள் மட்டுமே உயிரிழந்ததாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில், பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை மந்திரி Khawaja Asif வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாகிஸ்தானின் பொறுமை எல்லை கடந்துவிட்டது. இது தற்போது பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையிலான வெளிப்படையான போர்” என தெரிவித்துள்ளார். ‘ஆபரேஷன் கசாப் லில் ஹக்’ என்ற பெயரில் காபுல் உள்ளிட்ட முக்கிய இடங்களை குறிவைத்து தாக்குதல் தொடரப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்த தலீபான் அரசின் செய்தித் தொடர்பாளர் Zabihullah Mujahid, “பாகிஸ்தான் தாக்குதலை தொடர்ந்தால் கடுமையான பதிலடி வழங்கப்படும்” என எச்சரித்துள்ளார்.
இரு நாடுகளும் முந்தைய மாதங்களில் கத்தார், துருக்கி போன்ற நாடுகள் மத்தியஸ்தம் செய்த பேச்சுவார்த்தையில் போர்நிறுத்தத்துக்கு சம்மதித்திருந்தாலும், தற்போது நிலைமை மீண்டும் கடுமையாகியுள்ளது. தென் ஆசியப் பகுதியில் பாதுகாப்பு சூழல் மேலும் மோசமடையக்கூடும் என சர்வதேச சமூகத்தில் கவலை எழுந்துள்ளது.