ஆங்கில புத்தாண்டு: தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் 545 குழந்தைகள் பிறப்பு

சென்னை,
நாடு முழுவதும் நேற்று ஆங்கில புத்தாண்டு உற்சாகமாக கொண்டாடப்பட்டது. புதிய ஆண்டின் முதல் நாளில் பிறந்த குழந்தைகள், புத்தாண்டுடன் சேர்ந்து தங்களது பிறந்தநாளையும் கொண்டாடும் சிறப்பு பெற்றுள்ளனர். அந்த வகையில், ஆங்கில புத்தாண்டு தினமான நேற்று தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் ஏராளமான குழந்தைகள் பிறந்துள்ளன.

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் 15 பெண் குழந்தைகள் மற்றும் 6 ஆண் குழந்தைகள் என மொத்தம் 21 குழந்தைகள் பிறந்தன. இதில் 2 தாய்மார்களுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது குறிப்பிடத்தக்கது. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 7 குழந்தைகள் (பெண்–4, ஆண்–3) பிறந்தன. திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் காந்தி மருத்துவமனையில் 6 குழந்தைகளும், ராயபுரம் அரசு ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் 12 குழந்தைகளும் (ஆண்–5, பெண்–7) பிறந்தன.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 8 குழந்தைகள் (ஆண்–4, பெண்–4), செங்கல்பட்டு மாவட்டத்தில் 20 குழந்தைகள் (ஆண்–9, பெண்–11) பிறந்துள்ளன. கோவை மாவட்டத்தில் 11, நீலகிரியில் 6, திருப்பூரில் 13, வேலூரில் 8, திருவண்ணாமலையில் 22 மற்றும் திருப்பத்தூரில் 12 குழந்தைகள் பிறந்தன. ராணிப்பேட்டை மாவட்டத்தில் 6 குழந்தைகள் பிறந்துள்ளன.

குமரி மாவட்டத்தில் 6, ஈரோட்டில் 12, திண்டுக்கல்லில் 20, தேனியில் 13, கடலூரில் 13, கள்ளக்குறிச்சியில் 47, விழுப்புரத்தில் 27, மதுரையில் 22, சிவகங்கையில் 7, ராமநாதபுரத்தில் 6 மற்றும் விருதுநகரில் 6 குழந்தைகள் பிறந்துள்ளன.

நெல்லை மாவட்டத்தில் ஆண் 9, பெண் 15 என மொத்தம் 24 குழந்தைகள் பிறந்துள்ளன. தூத்துக்குடியில் 12, தென்காசியில் 20, திருச்சியில் 13, பெரம்பலூரில் 10, அரியலூரில் 3, புதுக்கோட்டையில் 14, கரூரில் 4 குழந்தைகள் பிறந்தன. கிருஷ்ணகிரியில் 15, தர்மபுரியில் 13 குழந்தைகள் பிறந்துள்ளன.

மேலும், நாமக்கல்லில் 10, சேலத்தில் 29, தஞ்சையில் 22, திருவாரூரில் 3, நாகையில் 6 மற்றும் மயிலாடுதுறையில் 16 குழந்தைகள் பிறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு, நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி முதல் நேற்று மாலை வரை தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் மொத்தம் சுமார் 545 குழந்தைகள் பிறந்துள்ளன.