கன்னியாகுமரி மாவட்டத்தின் ரெயில்வே தேவைகள் மற்றும் நீண்ட நாள் கோரிக்கைகளை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில், கன்னியாகுமரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், மத்திய ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவை புதுடெல்லியில் சந்தித்து மனு அளித்தார். மாவட்டத்தின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தவும், பயணிகளின் சிரமங்களை குறைக்கவும் பல்வேறு திட்டங்கள் அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

முதன்மையாக, கன்னியாகுமரியை தலைமையிடமாகக் கொண்டு புதிய ரெயில்வே கோட்டம் அமைக்க வேண்டும் என்ற மக்கள் கோரிக்கையை அவர் முன்வைத்தார். அதோடு, நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரம்–வேளாங்கண்ணி வாரந்திர ரெயில் சேவை மற்றும் கன்னியாகுமரி–ஐதராபாத் தினசரி விரைவு ரெயில் சேவை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

புதியதாக அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள சென்னை அம்ரித் பாரத் ரெயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என்றும், புனலூர்–மதுரை ரெயிலை காரைக்கால் வரை நீட்டிக்க வேண்டும் என்றும் அவர் கோரினார். மங்களூர்–திருவனந்தபுரம் ரெயில், ஹவ்ரா–திருச்சி ரெயில் ஆகியவற்றையும் கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் எனவும், திருநெல்வேலி வந்தேபாரத் ரெயிலை நாகர்கோவில் வரை நீட்டிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி பயணிகளின் வசதிக்காக திருவனந்தபுரம்–நாகர்கோவில் ரெயில்களை நீட்டிக்க வேண்டும் என்றும், தாம்பரம்–நாகர்கோவில் மற்றும் ராமேஸ்வரம்–கன்னியாகுமரி ரெயில்களை தினசரி சேவையாக மாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டார்.

காந்திதாம் விரைவு ரெயில் மற்றும் ஜாம்நகர் ரெயில் குழித்துறை நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்றும், புனலூர்–மதுரை ரெயில் பள்ளியாடி நிலையத்தில், திருச்சி–திருவனந்தபுரம் இன்டர்சிட்டி ரெயில் இரணியல் நிலையத்தில் நிறுத்தம் பெற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரெயில் இரட்டிப்பு பணிகள் மந்தமாக நடைபெறுவதை சுட்டிக்காட்டிய அவர், அவற்றை துரிதப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், கன்னியாகுமரியில் மின்சார லோகோ ஷெட் அமைத்தல், நாகர்கோவில் டவுன் மற்றும் கன்னியாகுமரி ரெயில் நிலையங்களுக்கு இரண்டாவது நுழைவு வாயில் அமைத்தல், நாகர்கோவில் டவுன், இரணியல், குழித்துறை நிலையங்களில் கூடுதல் நடைமேடைகள் அமைத்தல் ஆகியவை அவசியம் என குறிப்பிட்டார்.

குழித்துறை ரெயில் நிலையத்துக்கு செல்லும் சாலை மோசமான நிலையில் இருப்பதால் அதை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றும், மழைக்காலங்களில் தண்டவாளங்களில் மண்சரிவு ஏற்படுவதைத் தடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். பயணிகள் வசதிக்காக ரெயில் நிலையங்களின் முழுமையான மேம்பாடு அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ராமேஸ்வரம்–தூத்துக்குடி–திருச்செந்தூர்–கன்னியாகுமரி கடற்கரை ரெயில் பாதையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், அங்கமாலி–எருமேலி–விழிஞ்சம் ரெயில் பாதையின் ஒரு பகுதியை நெட்டா–குலசேகரம்–பூதப்பாண்டி வழியாக ஆரல்வாய்மொழி வரை நீட்டிக்க ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் கோரினார். இறுதியாக, காலி சரக்கு ரெயில்கள் செல்ல கன்னியாகுமரி–நாகர்கோவில் இடையே மூன்றாவது ரெயில் பாதை அமைக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.