காலத்தையும் நிலத்தையும் தாண்டி உலகெங்கிலும் பொதுமறையாகப் போற்றப்படும் திருக்குறளை மையமாகக் கொண்டு, ‘The Ageless Wisdom of the Indian Poet and Philosopher Thiruvalluvar’ என்ற ஆவணப்படம் ஆங்கிலம், தமிழ், இந்தி, பிரெஞ்சு, ஜப்பானியம் ஆகிய ஐந்து மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது.

இவ்வாவணப்படத்தின் ஆங்கில பதிப்பு நவம்பர் 16ஆம் தேதி அமெரிக்காவின் வர்ஜீனியா நகரில் சிறப்புத் திரையிடப்பட உள்ளது. மனித சமத்துவத்தை மையக் கருப்பொருளாகக் கொண்ட இந்த ஆவணப்படத்திற்கான திரைக்கதை அமெரிக்கத் தமிழர் டாக்டர் விஜய் ஜானகிராமன் ஆகியோரால் எழுதப்பட்டுள்ளது. படத்தைத் தயாரித்திருப்பவர், திருக்குறளை குறித்து பல ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் நூல்கள் எழுதியுள்ள டாக்டர் ஆர். பிரபாகரன் ஆவார்.

திருக்குறளின் உலகளாவிய மதிப்பையும் அதன் மனிதநேயச் செய்திகளையும் பிற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆவணப்படம், இன்றைய இளம் தலைமுறையும் எளிதில் அணுகக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பல அரிய வரலாற்று பதிவுகள் இடம்பெற்றுள்ளன.

சென்னை ஆட்சியாளராக இருந்த ஆங்கிலேயர் எல்லிஸ் பிரபு அச்சடித்த வள்ளுவர் உருவமுள்ள தங்க நாணயம், வீரமாமுனிவர் லத்தீன் மொழியில் மொழிபெயர்த்த திருக்குறளின் கையெழுத்துப் பிரதிகள், குறள்கள் பொறிக்கப்பட்ட பழமையான ஓலைச் சுவடிகள், உலகின் பல பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலைகள் உள்ளிட்ட பல முக்கிய ஆவணங்களும் காட்சிகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட குறள்களை விளக்கும் கிராஃபிக்ஸ் காட்சிகள் மற்றும் காமத்துப்பாலை மையப்படுத்திய சிறுகதைக் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

ராகுல், ராஜீவ் ஆனந்த், ஹன்சிகா, சுபா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தயாரிப்பில் டாக்டர் இ. ஜே. சுந்தர் இணைந்துள்ளர். தேசிய விருது பெற்ற இயக்குநர் அம்ஷன் குமார் இப்படத்தை இயக்கியுள்ளார். வாஷிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கம் இந்த ஆவணப்பட வெளியீட்டு விழாவை நடத்துகிறது.