சென்னை,

இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையே நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையால் அங்கு வசித்து வரும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், குறிப்பாக அந்நாடுகளில் வேலைக்காக சென்றுள்ள தமிழர்களை உடனடியாக பாதுகாப்பாக மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

 

அரசுகளுக்கு இடையே நடைபெறும் அதிகாரப் போராட்டங்களில் அதிகமாக பாதிக்கப்படுவது அப்பாவி பொதுமக்கள்தான் என்று சீமான் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் நடைபெற்று வரும் போரிலும், உக்ரைனில் நீடித்து வரும் போரிலும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பல லட்சம் மக்கள் உணவின்றி, குடியிருப்பின்றி கடும் துயரங்களை அனுபவித்து வருகின்றனர். அந்த காட்சிகள் உலகம் முழுவதும் மக்களின் மனதை உலுக்கும் வகையில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையே ஏற்பட்டுள்ள மோதல் மேலும் தீவிரமடைந்து வருவது கவலைக்குரியதாகும். இந்த போர் நீடித்தால் அங்கு வாழும் பல லட்சக்கணக்கான பொதுமக்கள் தினமும் பல்வேறு சிரமங்களையும் ஆபத்துகளையும் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் சீமான் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தமிழ்நாட்டில் இருந்து பொருளாதார காரணங்களால் வெளிநாடுகளுக்கு வேலைக்காக சென்றுள்ள பலர் தற்போது அந்நாடுகளில் சிக்கித் தவித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குடும்ப வறுமை காரணமாக தமிழ்நாட்டைச் சேர்ந்த பலர் இஸ்ரேல், ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு வேலை தேடி சென்றுள்ளனர். தற்போது அங்கு நிலவி வரும் போர்சூழ்நிலை காரணமாக அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள முடியாமல் சிரமப்படுவதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக ஈரான் நாட்டிற்கு மீன்பிடித் தொழிலுக்காக சென்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த பல நூறு மீனவர்கள் அங்கு சிக்கி தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தாயகத்திற்குத் திரும்புவதற்கான போதிய வசதிகள் மற்றும் பணம் இல்லாமல் அவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் மிகப்பெரிய கடலோரப் பகுதி இருந்தும், மீனவர்கள் வாழ்வாதாரம் பெற முடியாமல் அயல்நாடுகளுக்கு சென்று மீன்பிடித் தொழில் செய்ய வேண்டிய அவலநிலை நிலவுவது வரலாற்று துயரமாகும் என்றும் சீமான் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் சிக்கியுள்ள தங்கள் குடும்ப உறுப்பினர்களின் நிலைமை குறித்து தெரியாமல் குடும்பத்தினர் மிகுந்த கவலையுடனும் பதட்டத்துடனும் காத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனவே ஈரான், இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் சிக்கித் தவிக்கும் மீனவர்கள் உள்ளிட்ட தமிழர்களை உடனடியாக பாதுகாப்பாக மீட்டு தாயகத்துக்கு அழைத்து வர இந்திய ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் தமிழ்நாடு அரசும் வெளிநாடு வாழ் தமிழர் நலன் அமைச்சகத்தின் மூலம் மத்திய அரசுடன் இணைந்து தமிழர்களை மீட்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அத்துடன் வெளிநாடுகளில் இருந்து தமிழர்களை தாயகத்துக்கு அழைத்து வருவதற்கான பயணச் செலவுகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் முழுமையாக ஏற்க வேண்டும் என்றும் சீமான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.