சென்னை:

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் அதிகரித்து காணப்படும் நிலையில், சென்னை, சேலம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் பிப்ரவரி 13-ம் தேதி வரை மூடுபனி நீடிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக அதிகாலை வேளைகளில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. எதிரில் வரும் வாகனங்கள் கூட தெளிவாக தெரியாத அளவுக்கு மூடுபனி காணப்படுவதால், காலை நேரத்திலும் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்ல வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. குறிப்பாக ஜிஎஸ்டி சாலை, சென்னை–பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட முக்கிய போக்குவரத்து பாதைகளில் பனிமூட்டம் அதிகமாக இருந்ததால், வாகனங்கள் மெதுவாக இயக்கப்பட்டன. இதனால் போக்குவரத்து சற்று பாதிக்கப்பட்டது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட விளக்கத்தில், தற்போது தமிழகத்தில் நிலவும் தெளிந்த வானம் காரணமாக இரவு நேரங்களில் குளிர் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் பூமியின் மேற்பரப்பிலிருந்து வெப்ப இழப்பு அதிகரிப்பதால், மேற்பரப்பு வெப்பநிலை குறைந்து, வளிமண்டலத்தின் கீழ்மட்டங்களில் ‘வெப்பநிலை புரட்டல்’ (Temperature Inversion) உருவாகிறது. இந்த நிலை பனிமூட்டம் உருவாக முக்கிய காரணமாக அமைகிறது.

மேலும், தற்போது நிலவும் கிழக்குத் திசை காற்று வங்காள விரிகுடாவிலிருந்து ஈரப்பதத்தை நிலப்பகுதிகளுக்குள் கொண்டு வருகிறது. இதன் காரணமாக வளிமண்டலத்தின் கீழ்மட்டங்களில் ஈரப்பத அளவு அதிகரிக்கிறது. அதிக ஈரப்பதம், குறைந்த மேற்பரப்பு வெப்பநிலை மற்றும் வெப்பநிலை புரட்டல் ஆகிய மூன்றும் ஒன்றிணைந்து சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பனிமூட்டம் உருவாவதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்கியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல், லேசான காற்று வீசுவதால் கிடைமட்ட காற்று பரவல் குறைந்து, பனிமூட்டம் நீடிப்பதற்கும் இது ஆதரவாக உள்ளது. இதன் விளைவாக, அதிகாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை பனிமூட்டம் அதிகமாக காணப்படும் என்றும், இந்த நேரங்களில் காட்சித்திறன் கணிசமாக குறைய வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாளையும், நாளை மறுநாளும் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும். இதேபோல், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம், ஈரோடு மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் லேசான பனிமூட்டம் நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 12 மற்றும் 13 தேதிகளில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, திண்டுக்கல், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் மிதமான பனிமூட்டமும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் லேசான பனிமூட்டமும் ஓரிரு இடங்களில் காணப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், இன்று முதல் பிப்ரவரி 15-ம் தேதி வரை தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை வானம் தெளிவாக காணப்படும். அதன் பின்னர் ஓரளவு மேகமூட்டம் ஏற்படக்கூடும். அதிகாலை வேளைகளில் சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். இன்றைய தினம் அதிகபட்ச வெப்பநிலை சுமார் 31 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.