சென்னை:

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் சூழ்நிலை காரணமாக இந்தியாவில் சமையல் எரிவாயு (எல்.பி.ஜி.) தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க மத்திய அரசு சில முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக பெட்ரோலிய சுத்திகரிப்பு நிறுவனங்கள் பயன்படுத்தும் சில மூலப்பொருட்களை சமையல் எரிவாயு உற்பத்திக்காக மாற்றும் வகையில் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மத்திய அரசு கடந்த புதன்கிழமை வெளியிட்ட உத்தரவில், இந்தியாவில் செயல்படும் அனைத்து எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களும் புரோப்பேன் (Propane) மற்றும் பியூட்டேன் (Butane) போன்ற மூலப்பொருட்களை அதிக அளவில் எல்.பி.ஜி. உற்பத்திக்காக பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் உள்நாட்டில் சமையல் எரிவாயு தேவையை பூர்த்தி செய்ய முடியும் என அரசு கருதுகிறது.

மேலும், இந்த எல்.பி.ஜி. எரிவாயு இந்தியன் ஆயில் (Indian Oil), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (HPCL), பாரத் பெட்ரோலியம் (BPCL) ஆகிய மூன்று பொதுத்துறை எண்ணெய் வணிக நிறுவனங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, பெட்ரோலிய சுத்திகரிப்பு நிறுவனங்கள் இனிமேல் பெட்ரோகெமிக்கல் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் புரோப்பேன் மற்றும் பியூட்டேன் போன்ற மூலப்பொருட்களை சமையல் எரிவாயு தயாரிப்பிற்காக மாற்றி பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதேபோல், இந்த மூன்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களும் வீட்டு பயன்பாட்டிற்கான எல்.பி.ஜி. சிலிண்டர்கள் மட்டுமே சந்தையில் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அரசு தனது உத்தரவில் கூறியுள்ளது. இதன் காரணமாக வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர்களின் விநியோகத்தில் தற்காலிக கட்டுப்பாடுகள் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்த உத்தரவுக்கு எதிராக ஓட்டல் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது. வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர்கள் இல்லாமல் ஓட்டல்கள் மற்றும் உணவகங்களை நடத்துவது மிகவும் சிரமமானதாக இருக்கும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எம். வெங்கடசுப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓட்டல்கள் மற்றும் உணவகங்கள் பெரும்பாலும் வணிக எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்தி தான் செயல்படுகின்றன என்று தெரிவித்துள்ளார்.

வணிக எரிவாயு சிலிண்டர்களின் விநியோகம் கட்டுப்படுத்தப்பட்டால் ஓட்டல்கள் மற்றும் உணவகங்களின் செயல்பாடுகள் பாதிக்கப்படும். பல இடங்களில் உணவகங்களை தற்காலிகமாக மூட வேண்டிய நிலையும் உருவாகலாம் என்றும் அவர் கூறினார்.

மேலும், இந்த துறையை சார்ந்து வேலை செய்து வரும் ஆயிரக்கணக்கான பணியாளர்களின் வாழ்க்கையும் பாதிக்கப்படும் என்ற கவலையும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர்களின் விநியோகத்தை முறையாக தொடர்ந்து வழங்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு விரைவில் தீர்வு காண வேண்டும் என ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.