புதுடெல்லி,
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், கிரிக்கெட் வீரர்கள் கோல்ப் விளையாட்டிலும் ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இது அவர்களின் திறனை மேம்படுத்துவதோடு, மன அமைதியையும் அளிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “கிரிக்கெட் வீரர்கள் கிரிக்கெட்டுடன் கோல்ப் விளையாடவும் வேண்டும். நான் சிறு வயதில் கோல்ப் விளையாடியிருந்தால், அது எனது கிரிக்கெட் திறனை மேலும் மேம்படுத்தியிருக்கும்” என்றார்.
மேலும், கோல்ப் விளையாட்டு மன அழுத்தத்தை குறைத்து, மன அமைதியை ஏற்படுத்தும் சிறந்த விளையாட்டு என்றும் அவர் குறிப்பிட்டார். “உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், கோல்ப் உங்களை அமைதியாக வைத்திருக்கவும், மன அழுத்தத்தை போக்கவும் உதவுகிறது” என்று அவர் தெரிவித்தார்.
வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களை எடுத்துக்காட்டாகக் கூறிய அவர், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் தென்ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் உள்ள கிரிக்கெட் வீரர்கள் இளம் வயதிலேயே கோல்ப் விளையாடி வருகிறார்கள் என்றும் தெரிவித்தார். இது அவர்களின் விளையாட்டு திறனை வளர்க்க உதவுகிறது என்றும் கூறினார்.
இந்தியாவில் கோல்ப் விளையாட்டை உயர்ந்தவர்களுக்கான விளையாட்டாக பார்க்கும் நிலை இருப்பதாகவும், ஆனால் அந்த மனப்பான்மை மாற வேண்டும் என்றும் யுவராஜ் சிங் வலியுறுத்தினார். “ஒவ்வொரு சிறுவர்களும், சிறுமிகளும் கோல்ப் விளையாட்டை முயற்சி செய்து பார்க்க வேண்டும். அதை பள்ளி நிலைமையிலேயே கொண்டு செல்ல முயற்சிகள் நடைபெற்று வருகின்றன” என்றார்.
அதே நேரத்தில், கிரிக்கெட் தான் இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு என்பதை அவர் ஒப்புக்கொண்டார். இருந்தாலும், கோல்ப் ஒரு உற்சாகமான மற்றும் பயனுள்ள விளையாட்டு என்றும், அனைவரும் அதை விளையாட முயற்சி செய்ய வேண்டும் என்றும் கூறினார்.
மொத்தத்தில், கிரிக்கெட் வீரர்கள் தங்கள் திறனை மேம்படுத்தவும், மனநிலையை கட்டுப்படுத்தவும் கோல்ப் விளையாட்டு உதவும் என யுவராஜ் சிங் தெரிவித்த கருத்து விளையாட்டு உலகில் கவனம் பெற்றுள்ளது.